.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, December 31, 2014

2015

 HAPPY 2015 !

மாயம் ஆகாத விமானம் வேண்டும் !
காயம் படாத கிரிக்கெட் வேண்டும் !

குண்டு வெடிக்காத காஷ்மீர் வேண்டும் !
"Gaaண்டு" கொள்ளாத neighbours வேண்டும் !

ஏற்றம் இல்லாத விலைகள் வேண்டும் !
சீற்றம் இல்லாத அலைகள் வேண்டும் !

Wi-fi காற்றோடு கலந்துவர வேண்டும் !
Selfie எடுத்திடவே மூணாம்கை வேண்டும் !

 -------------------
என் BLOG-க்குத் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் !

Sunday, December 21, 2014

மனம் மயக்கும் மார்கழி !

துயில் நீக்கும் கோவிலிலே சுப்ரபாதம் ! - பனித்
  துளிதூங்கும் இலைதாங்கும் பூந்தோட்டம் !
குயில் குரல்கள் கச்சேரி களைகட்டும் ! - சிறு
  குளிர்தோன்றி சில்லெனவே மெய்சிலிர்க்கும் !

சின்ன  இடை வஞ்சியரின் கைஜாலம் ! - பல‌
   வண்ணத்திலே வாசலிலே மாக்கோலம் !
சின்ன தாக பூசணிப்பூ புன்சிரிக்கும் ! - நமை
  மெள்ளதாக வீட்டுக்குள்ளே தானழைக்கும் !

மாதம் தனில் மார்கழியே மனமயக்கும் ! - புது
  வசந்தம்போல் இன்பமதை தான்சேர்க்கும் !
கீதம் அதுநாதமுடன் காற்றில்வரும்  !- தைப்
   பண்டிகைக்குத் தந்திடுமே முன்னோட்டம் !




Saturday, November 8, 2014

இடி !

வானிலை அறிக்கை கேட்டேன் !
   வருகுது பெரும்புயல் என்றார் !
நீர்நிலை மட்டம் எல்லாம்...
   உயர்ந்திடும் என்றும் சொன்னார் !

கடும் மழை புயலிலெல்லாம்..
    குழந்தையர் சிக்கா திருக்க....
"விடுமுறை பள்ளிகள்" என்று...
   இன்னொரு சேதியும் சொன்னார் !

தூரல்கள் அங்கும் இங்கும்...
   ஓரிரு எண்ணியேத் தூர...
பேரிடி, காற்றும் இன்றி...
    பொய்த்தது வானிலை அறிக்கை !

அடுத்தநாள் புயலைப் பற்றி...
   பெரியதாய் அறிக்கை இல்லை..
கடுப்பிலே இருந்தவன் போல...
   கதிரவன் கொதித்தே மேய்ந்தான் !

பள்ளியில் நடந்த தென்று
   'பகீர்'எனும் செய்தி ஒன்றை...
சொல்லிடக் கேட் டதிர்ந்தேன் !
   என்சொலக் கொடுமை தன்னை !

நாலிரு வயதேஆன...
    பூத்திடா பூவின் மொட்டை
பாலியல் கொடுமை செய்தான்!
   போதனை செய்யும் ஆசான் !

நேற்றைய வானிலை அறிக்கை...
   இன்றுதான் பலித்தது போல...
கீற்றென மின்னலும் இடியும்...
    குழந்தையின் வாழ்வில் இன்று !

சிறுவரை பாலியல் கொடுமை
   செய்துசீர் அழிக்கும் இந்த...
சிறுசெயல் தன்னை ஒழிப்போம் !
   சிந்தனை நல்லது கொள்வோம் !

Friday, October 10, 2014

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !



சர்வம் சாய் மயம் என்ற எனது ஷீரடி சாய் பாபா மீதான பாடல்கள் அடங்கிய சி.டி.யில் இடம் பெற்ற எனது மற்றுமொரு பாடலுக்கான வரிகள்:



பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/ennai-soozhndirukkum-sai

 பல்லவி

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !
நெஞ்சில் ஆழ்ந்திருக்கும் சாயி !
என் நினைவெல்லாம் சாயி !
என் கனவெல்லாம் சாயி !
என் சர்வமும் சாயி மயம் !
என் சர்வமும் சாயி மயம் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 1

தனி தனி தனி தனியாக நான் போகும் போது...
துணை துணை துணை...துணையாக வந்திடுவான் !

பிணி பிணி பிணி பிணி என்னை பீடிககும் போது...
உதி உதி உதி உதி தந்து மீட்டிடுவான் !

காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !
காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !

காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !
காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 2

ஒரு ஒரு ஒரு ஒரு தரம் திருமுகம் பார்த்தால்
மறு மறு மறு மறு தரம் பார்க்கத் தூண்டும் !

குரு குரு குரு குருவாரம் விரதமி ருந்தால்...
திரு திரு திரு திருவாகும் வேண்டுதலே !

சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !
சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !

செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம் கூடுமே !
செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம்  கூடுமே !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

Wednesday, September 24, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?!

கருங்கூந்தல் மேகக் காரி !
   கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
   உலர்த்திடத்  தலைவிரித்தாளே !

தரையெலாம் சிதறியே விழுமாம்...
  தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
    மண்ணிலே வருணன் பார்வை !

பூமியின் அடியில் தோன்றி...
   பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
   பூமிதான் பிறந்த வீ டாகும் !

விடுப்பிலே தாயின் வீடு
    திரும்பிடும் புதுப் பெண்போல‌
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
    'திபுதிபு' என மண்சேரும் !

நீரெனப் புவியில் ஓடி
   நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
    தரையிலே வீழ்ந்திடும் போதும்

புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
   புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
   சொல்லாமல் சொல்வது என்ன?

உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
   நடந்திடும் உன்னத‌ குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
   சங்கதி புரிந்தே வாழ்வோம் !

Wednesday, September 17, 2014

பகிரப்பட்ட விருது !

திரு.யாழ்பாவாணன் அவர்கள், தனக்கு கிடைத்த விருதினை, பெருந்தன்மையுடன்  10 பதிவர்களுடன் பகிர்ந்துள்ளார் http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html. அந்த பத்து பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறேன்.

அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.  அவர் பகிர்ந்த விருது இதோ...







நன்றிகள் பலவுடன்
பிரசாத்

Thursday, August 28, 2014

பிள்ளையார் - நண்பேண்டா !

என் மகன் பள்ளியில் பாடுவதற்காக, எழுதியது !




தொந்தி வெச்ச பிள்ளையாரு !
என்னுடைய நண்பேன்டா !
வந்து என்ன பாக்குறநீ
வந்த வழி திரும்புடா !
மந்திரத்த சொல்லிகிட்டு
மோதகத்தை படையல் செஞ்சேன் !
மோதகத்தை ஏத்துகிட்டு
சாதகமா நடந்துக்குவார் !

(தொந்தி வெச்ச)

அப்பா செல்லம் யாருடா?
சிங்கக் குட்டி நானடா !
எல்லாருக்கும் செல்லம் இங்கே
பிள்ளையாரு தானடா !

தப்பு ஏதும் செஞ்சுபுட்டா..
தோப்புக் கர்ணம் போட்டுபுட்டா
தப்பை எல்லாம் மறந்திடுவார்
தங்க பிள்ளையாருடா !

(தொந்தி வெச்ச)


Thursday, August 14, 2014

மங்கையராய் பிறப்பதற்கே...!





கருவிலே 'பெண்சிசு' என்றால்..
   கலைத்திட வழிகள் செயவார் !
உருவுடன் வெளியே வந்தால்...
   குப்பையில் தூக்கியே எறிவார் !

குப்பையில் கண்டெடுத் தவனும்
   கண்களை சிதைத்தே விடுவான் !
தப்பவே முடியா இடத்தில்...
   பிச்சையும் இரங்கிட வைப்பான் !

கன்னியாய் வளர்ந்தே நின்றால்
   காளையர் சேட்டைகள் செய்வார் !
பெண்மையை ருசித்துப் பார்த்து
    காட்சியில் மறைந்தே போவார்!

முதுமையில் வீட்டில் தனியே
   முழுமையாய் ஓய்வும் கொண்டால்
முதுகிலே கத்தி நுழைத்து...
    உயிரையும் மாய்த்தே போவார் !

'பெண்' என உலகில் பிறந்தால்
     ஒவ்வொரு பருவம் தனிலும்
எண்ணிலா துயரம் வாட்டும் !
      என்செயும் பெண்கள் கூட்டம்?

பெண்களே இல்லை என்றால்..
   பூமியே உய்வதும் இல்லை...
எண்ணியே பார்த்திட வேண்டும்..
  ஏளனம் செய்திடும் கூட்டம் !

ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டி (2014) க்காக எழுதப்பட்டது ...
============

"பெண் சுதந்திரம்" பற்றிய பேச்சுக்கள் இன்னும் பேச்சளவிலேயே உள்ளதும், அது ஒரு சபதமாக மூச்சினிலே கலக்காத நிலை தொடர்வதும், மிகவும் வேதனைக்குரியது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினசரி செய்தியானது வருந்தத்தக்கது. பெண்கள் இனத்தயே அழித்து விடவேண்டும் என்ற நோக்கோடு வன்முறையாளர்கள் செயல்பட்டுவருவது போல் தோன்றுகிறது. இது கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

Sunday, August 3, 2014

பிற தளங்களில்...

இணையத்தில் மற்ற தளங்களில் இடம் பெற்ற எனது படைப்புகள் :  

வல்லமை
அதீதம்


SoundCloud.com

"சந்தித்ததும் சிந்தித்ததும்" என்ற பெயரில் பதிவெழுதும் நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவில், என்னுடைய கவிதை:


போட்டியில் வென்றதற்கான அறிவிப்புகள் :

Saturday, August 2, 2014

பூவை

படத்துக்குப் பாட்டு -  ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது ...

கூந்தலில் சூடும் பூவை
   கூடையில் ஏந்திக் கொண்டு
பாந்தமாய் வளைந்தே நிற்கும்
   பூவைப்போல் தோன்றும் பூவை...
பார்வைதான் யாரைத் தேடும் ?
    பொங்குதே விழியில் நாணம் !
கோர்வையாய் வார்த்தைத் துளிகள்
    கவிதையின் சரமெனத் துள்ளும் !

"பூ"வெனக் கூவியே சென்ற‌
   வீதியின் கடைசி வீட்டில்...
"ஆ" வென சத்தம் எழுப்பி
   இவளது கவனம் ஈர்த்த...
மேலுடை அணியாக் காளை
   முகமது நினைவில் தோன்ற...
கால்களும் கோலம் போடும் !
    கனவிலே நெஞ்சம் ஓடும் !

"நேற்றுபோல் இன்றும் அவனே
   நேரிலே தோன்றிடு வானோ?
காற்றிலே பறந்தென் நெஞ்சம்
   காதலை மொழிபெயர்த் திடுமோ?"
என்றெலாம் எண்ணியே இவளும்
   இன்றைய ஊர்வலம் துவங்க...
"நன்றெலாம் நடக்கும்" எனநாம்
   நல்லதோர் வாழ்த்தும் சொல்வோம் !

 

Friday, August 1, 2014

தித்திக்குதே !

இனிப்புதான் மிகவும் பிடிக்கும்
   என்றதை உண்டே வந்தால்...
இனிப்பதே உன்னைப் பிடிக்கும்
    சர்க்கரை நோயின் மூலம் !

ஜாங்கிரி, கேசரி என்று
    இனிப்புகள் பெயரைக் கேட்டால்
பொங்கிடும் நீரூற் றெனவே
     ஊறிடும் உள்நாக் கினிலே !

ஒன்றுதான் இரண்டுதா னென்று
    ஒவ்வொரு முறையும் இங்கே...
உண்டுநீ வந்தால் போதும்...
  'சர்'ரென சர்க்கரை ஏறும் !

யாருமே பார்க்கா நேரம்
   வாயினில் தினிக்கத் தோணும் !
கூறுமே உண்மையை இங்கே
   நேர்ந்திடும் உடல்மாற் றங்கள் !

வீட்டிலே உள்ளவர் எல்லாம்
    வாய்த்ததோர் வாய்ப்பு என்றே
சூட்டிலே பொசுக்கிய சொல்லால்
     'கரிசனம்' காட்டியே செல்வார் !

நாவினை அடக்கியே நாளும்
   வித்தையை அறிந்திட வேண்டும் !
தீவினை சர்க்கரை நோயாய்
   மேவிடும் முன்பே நாமும் !

Saturday, July 26, 2014

அழகான அதிகாலை !


அதிகாலைப் பொழுது பிறக்கின்ற பொழுது
புதுப் பாடல் உருவாக்கும் மனது - ஒரு
புதுப் பாடல் உருவாக்கும் மனது

(அதிகாலைப் பொழுது)

துயில் நீக்கும் சேவல்தான் கூவி..-புது நாட்கதவைத் திறக்கின்ற சாவி.
ந‌ன்னாளை வரவேற்கு கோலம் - நம் நங்கையர் கைகளின் ஜாலம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

(அதிகாலைப் பொழுது)

சுப்ரபாதம் இசைத்திடும் கோவில் - முதல் தொழுகைதான் செய்யும் பள்ளிவாயில்
இரு நாதம் ஒரு சேர இன்பம் அது பொங்கிட துள்ளிடும் உள்ளம்

நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்

(அதிகாலைப் பொழுது)

(மறு பதிவு செய்யப்பட்டது).

Saturday, July 19, 2014

Facebook Friends !

"ராக்கெட் ராஜா", "we are bad bad bad boys" போன்ற திரைப் பட பாடல்கள் வரிசையில் FACEBOOK -கை வைத்து திரைப்பாடல் வந்தால் எப்படி இருக்கலாம் என்று ஒரு முயற்சி..
========================================================================

Facebook-ல UPDATE போட்டு....
Friends சேர்த்துக் கொள்வோம் !
Face-to-Face நாங்க பாக்கலனாலும்
ரொம்ப LIKE செய்வோம் !

அடுத்தவன் PHOTO...UPLOAD செஞ்சா
அதுக்கு கமண்ட்டு அடிப்போம் !

Facebook Friends ! நாங்க Facebook Friends !

--------------------

LOL எழுதி நாங்க மனசுக்குள்ள சிரிப்போம் !
லொள்ளு, டில்லி அரசியல்லு எல்லாம் share செய்வோம் !

டல்லாத் தோணும் STATUS UPDATE ஏதும் போடலேனா !
பில்லா ரங்கா ரேஞ்சுக்கு SCENE  ஏதும் காட்டலேனா !

ஒத்தக் காலில் நிக்கும் கொக்கு...
மீனின் வரவ பாத்து...

SELFIE போட்டு ஆவலாய் இருப்போம்
LIKE வருதா பாத்து...

Facebook Friends ! நாங்க Facebook Friends !

---------------

வேறொரு SITE-டில் படிச்சத எங்க படைப்புபோல விடுவோம் !
பிரச்சனை வந்தா அவருக்குக் கூட FRIENDS REQUEST தருவோம் !

கடலைத் தாண்டி MESSENGER வழியா கடல போட்டுஇருப்போம் !
விடலைப் பருவ MATTER  எல்லாம் விவரமாக ரசிப்போம் !

கெடச்சத கரைஞ்சு சாப்பிடும் காக்கா...
கூட்ட மாகக் கூடி...

கெடச்சத SHARE பண்ணி கமண்ட் அடிப்போமே
நாங்க அதுல கேடி

Facebook Friends ! நாங்க Facebook Friends !

Friday, July 11, 2014

அருணோதயம் ஆகின்றது ! - பாடல்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை திரு ராகுல் அவர்கள் பாடியிருக்கிறார்கள். நான் எழுதி, மெட்டமைத்திருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/arunodhayam

பாடலுக்கான வரிகளை எனது  முந்தைய பதிவொன்றில் காணலாம்.

Saturday, June 21, 2014

ஷீரடி சாய் பாபா பாடல் - கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை நானே எழுதி, மெட்டமைத்து, பாடியிருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam

பாடல் வரிகள் கீழே:
-----------------------------

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !

ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட‌
நெஞ்சில் பூத்திடும் சோலை !

(கேட்க கேட்க )

ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !

(கேட்க கேட்க )

கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !

(கேட்க கேட்க )

மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !

(கேட்க கேட்க )


Saturday, June 14, 2014

சிறுவரைப் பணி அமர்த்தல் தகுமோ?

பச்சிலம் பாலகனை, பள்ளிக்கு அனுப்பாமல்
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?

நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?

பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?

கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !

சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !

Saturday, May 10, 2014

கவிதைப் பிரசவம் !

கதையும் விதையும் கருவாகி
   கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
   சந்தமும் மோனையும் ஆகிடவே...

கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
    இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
    பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !


Friday, March 28, 2014

சாயி அருணோதயம் !


"சர்வம் சாயி மயம் " என்ற பெயரில் வெளிவந்துள்ள‌ CD-யில் இடம்பெற்ற எனது பாடல் ஒன்றுக்கான வரிகள் !



அருணோதயம் ஆகின்றது !
ஆலய வாசல்கள் திறக்கின்றது !

கருணாகரன் சாயி தரிசனம் காண...
கருணாகரன் சாயி தரிசனம் காண...

கூட்டம் அலையாய் வருகின்றது !
கூட்டம் அலையாய் வருகின்றது !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

வேத மந்திரமும் ஓதிடவே !
நாத சுரம் இசை பாடிடவே !

பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க !
மடந்தையர் பூஜைக்குப் பூப்பரிக்க !

திருவிழா கோலமே சன்னதியில் !
திருவிழா கோலமே சன்னதியில் !

குருசாயி நாதனின் சன்னதியில் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே !
அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே !

ஆரத்தி பார்த்திட ஆனந்தமே ! - மன
பாரத்தை இறக்கிய நிம்மதியே !

நாளொன்று பிறந்தது அவனருளால் !
நாளொன்று பிறந்தது அவனருளால் ! - எந்த‌

நாளுமே சென்றிடும் அவன்நினைவால் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

Wednesday, March 19, 2014

பூமியை வாழவிடு



பூமியிலே அழகுஎன்ன பூவா காற்றா? - சீறிப்
   பாய்ந்து வரும் கடலலையா? நீரின் ஊற்றா?
சாமியவன் படைப்பினிலே எல்லாம் அழகு ! - இன்னும்
   சொல்லப் போனால் கிரகங்களிலே பூமியே அழகு !

அழகுமிகும் பூமியிலே உயர்ந்தவன் மனிதா !  - அந்த‌
   அழகையெல்லாம் சிதைத்திடுதல் சரியா? முறையா?
நிழலைத்தரும் மரத்தையெல்லாம் வெட்டிச் சாய்த்தாய் !
    நிலத்தையெல்லாம் மனைகளாக்கி பசுமை மாய்த்தாய் !

அறிவியலின் போர்வையிலே அழிவுகள் செய்தாய் ! - அந்த‌
   இயற்கையோடு இயைந்த வாழ்வின் அருமை மறந்தாய் !
கரிப்புகையால் காற்றதனை காயம் செய்தாய் ! - அந்தக்
    காயம்பட்டக் காற்றினையே மூச்சாய் உண்டாய் !

உன்குலத்து சந்ததிகள் வாழ்ந்திட வேணும் ! - மற்ற‌
   உயிர்களுமே உரிமையுடன் வாழ்ந்திட வேணும் !
பண்ணெடுத்து வேண்டுகிறேன் கேட்டிட வேணும் ! - இந்த‌
   பூமியினை வாழவிடு எல்லோரும் வாழ !

Tuesday, March 11, 2014

ஷீரடி சாய் பாபா பாடல்கள் அடங்கிய எனது CD



(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)

அன்புடையீர் !

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD, தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 5 பாடல்களை எழுதியுள்ளேன். அதில் 2 பாடல்களை நானே பாடியும் உள்ளேன். என்னுடைய ஒரு பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள் ! 

இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 75 ரூபாய் மதிப்புள்ள இந்த CD -யைப் பெற விரும்புவோர், தங்கள் ஊர் பெயருடன் விருப்பத்தைத் தெரியப் படுத்துங்கள். CD யை உங்களிடம் சேர்ப்பதற்கான முறையை தெரியப்படுத்துகிறேன்.

Friday, March 7, 2014

பெண்மையைப் போற்றுவோம் !


பெண்ணும் ஆணும் சரிசமமா? - இந்தப்
    பேச்சினை நானும் ஏற்கனுமா?
எண்ணியேப் பார்க்கணும் ஒருநிமிடம் ! - பெண்
   சிறப்புகள் ஆணை விடஅதிகம்!

பூவும் தேனும் சரிசமமா? - ஒரு
   'பூ' தான் தேனைத் தருகிறது !
பூவும் பெண்ணும் நிகர்தானே ! - நாம்
   பெருவதைத் தருவது அவள்தானே !

பெற்ற தாயும் அவள்தானே ! - காதல்
   உற்றுக் கரைபவள் அவள்தானே !
சுற்றம் சேர்ப்பவள் அவள்தானே ! - நல்
   மாற்றம் செய்பவள் அவள்தானே !

வீட்டின் குலமகள் அவள்தானே ! - பல‌
   பாட்டின் ஊக்கமும் அவள்தானே!
நாட்டில் இன்றவள் நிலையென்ன? - இதை
   நினைத்திட நல்லதோர் கணமென்ன?

மான்களை வீழ்த்தும் புலியினம்போல் - பெண்
   மாண்பினை அறியா சிறுகுணத்தோர் !
'ஆண்கள்' நாமெனத் திமிரினிலே ! - பலக்
   கொடுமைகள் செய்குவார் ஊரினிலே !


பொறுத்தது போதும் இனியில்லை ! - இந்த‌
   சிறுத்துவ செயலுக்கு முடிவெடுப்போம் !
திருத்தமாய் சட்டம் செய்திடுவோம் ! - அதைத்
   தீவிர மாயஅமல் செய்திடுவோம் !

Tuesday, February 25, 2014

என்ன நடக்குது?!

சின்ன பல்புகூட சில நேரமே எரியும் ஊரில்...
வண்ண விளக்குகள் வீதி வழி எங்கும் !

செல்ல வழிகூட சொல்லிஉதவாதோர் ஊரில்...
சென்ற இடமெல்லாம் வாழ்த்தும் வணக்கமும் !

நல்லக் குடிநீரைத் நாடினாலும் கிடைக்காத ஊரில்...
வெல்ல இனிப்போடு தண்ணீர்த்  தரும்பந்தல் !

கெட்ட மணம்வீசும் குட்டிச் சந்துகள் கூடயிங்கு..
சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடருடன் !

பெற்ற பிள்ளைகூட உதறிய பெரு மூதோட்டிக்கு...
உற்ற துணை யாரோ வெள்ளைஉடையான் !

என்ன நடக்குதென விழிரெண்டும் விழிக்கும்போது
சின்னம் காட்டினானே...! தேருதல் நேரமென்று !

( இந்த சிந்தனைகளைத் தொடர்வதுபோல் எழுதி, இன்னும் மூன்று பத்திகளை இணையுங்களேன் பின்னூட்டத்தில் ! சேர்ந்து ரசிக்கலாம் ! )

Tuesday, January 28, 2014

போராட்டம்



போராட்டம் என்றாலே 'போர்' போல எனும்பொருளில்
   பெரியதொரு வன்முறையில் களம்காண்பார் சிலபேர்கள் !
பாராட்டும் வகையினிலே இடையூறு அவையின்றி
   பேரமைதிப் போராட்டம் செய்வார்கள் சிலபேர்கள் !

குடியரசு நாட்டினிலே கோரிக்கை வைப்பதற்கு...
   முறையான வழியதுதான் 'போராட்டம்' என்றிடினும்
அடிதடியும் சண்டைகளும் சுயநலத்தில் ஏவிடுவோர்
   நடத்திடுமோர் நாடகமாய் நாடோறும் காண்கின்றோம் !

அநியாயம் செய்வோரும் போராட்டம் எனும்பெயரில்
   அக்கிரமங்கள் செய்வதையும் அங்கிங்கு பார்க்கின்றோம் !
துணிவான மனதோடு ஒடுக்கங்கள் செய்யாமல்
   சட்டத்தைக் காப்பாரும் பாசாங்கு செய்கின்றார் !

பொதுநலமே முதன்மையென மகாத்மா போன்றோர்கள்
   போராட்டம் செய்தனரே ! பாராட்டி வாழ்த்திடலாம்!
எதுநலமே என்றேதும் உணராது பணத்திற்கே
   குழுசேர்ந்து குரல்கொடுத்தல் யாருக்கு லாபமிங்கே?

செய்திடுவோம் போராட்டம் அமைதிமிகு புரட்சியென!
    செய்வோர்கள் எல்லோர்க்கும் நலன்பயக்கும் காரணத்தில் !
உய்த்திடுமே உலகமெலாம் நல்வழியில் தான்தோய்ந்து !
   உயர்வுரலாம் எல்லோரும் ஒருசேரத் தானிங்கு !

Thursday, January 9, 2014

உழவர் திருநாள் ! தமிழர் திருநாள் !


வந்ததுவே! வந்ததுவே! இன்பம்தரும் பொங்கல் ! - நல்ல‌
   வழியதுவும் காட்டிடுமே பிறந்திடும் தைத்திங்கள் !
செந்தமிழர் பண்டிகையாய் சிறந்திடும்இப் பொங்கல் ! - புது
   மங்கலமாய் வாழ்வுதரும் வெற்றிகளும் தருமே !

கதிராலே ஒளிவீசும் கதிரவனும் சாமி ! - அவன்
    கருணைக்குத் தலைவணங்கி நிற்குமிந்த பூமி !
உதிராத மஞ்சளுடன், இஞ்சியதன் கொத்தும் - நல்லக்
    கரும்புடனே செய்திடுவோம் அவனுக்கொரு படையல் !

முப்போகம் செழித்திடவே உழவன்காணும் கனவு ! - அவன்
    உழைப்பாலே நினைவானால், நமக்கெல்லாம் உணவு !
எப்போதும் மாடோடும், ஏரோடும் வயலில் - அவன்
   பாடுபட நமக்கெல்லாம் நிறைந்திடுமே வயிறு !

பருவத்து மாற்றம்போல் மாறும்அவன் வாழ்வும் ! - அவன்
   பயனுக்குத் தொழில்நுட்பம் செய்தளிப்போம் நாமும் !
வருடத்தில் ஒருநாள்தான் அவனுக்கெனத் திருநாள் ! - அவனை
   வணங்கிநன்றி சொல்லிநாமும் பெருமைகொள்வோம் இந்நாள் !

Friday, January 3, 2014

இணையத்தின் சமூகப் பயன்பாடு

ரூபன் / பாண்டியன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை !
போட்டி முடிவுகளைக் காண:
http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html  


நுழைநயில்

"கணைய நோயென்றாலும், காதல், கண்ணராவி என்றாலும்
இணையத்தில் தேடித்தான் விடைஅறிகுவோம்
" - என்ற காலகட்டத்தில், நாம் வாழ்கிறோம். நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இன்றைய சமூதாயம் முழுவதும், இணைய வலைப் பரவி பிண்ணியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தூரங்களையும், நாட்டு எல்லைகளையும் தாண்டி, உடனக்குடன் தகவல்களைப் பறிமாற்றம் செய்து கொள்ள நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் பல கோடி மக்கள் இணையத்தில் இணைகிறார்கள். அதே நேரத்தில்,   ஆபாச படங்கள்,  வலைத் திருடர்கள் போன்றவை காரணமாக  சைத்தான்களின் ஆயுதமாகவும், வில்லனாகவும் இணையம் கருதப்படுகிறது.

2001-ம் ஆண்டு, ப்ரான்ஸ் நாட்டின் 'அழகியாக வெற்றி பெற்றவர் ஒரு ஆண்'  என்ற தவறான செய்தி இணையத்தில் வெளியாகி வெற்றியாளரைத் திடுக்கிட வைத்தது. அப்போது, நடுவர் குழுவினர் இணையத்தை "கட்டுப்பாடுகள் இல்லாத சாதனம்" என்றும், வதந்திகளைப் பரப்புவோர், குற்றவாளிகள், குழந்தைகளிடம் காமம் கொணர்வோர் போன்றோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குற்றம் சாட்டினர்.

இத்தகைய இணையம், சமூக வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், அந்தத் தாக்கத்தின் இயல்பிலும், அளவிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அறிஞர்களும், ஆய்வர்களும் இணையத்தின் மூலமாக நடைபெறும் கருத்து பரிமாற்றங்கள், நேருக்கு நேர் சந்தித்து பேசுதற்கு ஒப்பாகாது என்றும், மாறாக அது "தனிமை", "மன உளைச்ச"லுக்கு ஆளாக்குகிறது என்றும் கூறியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க, மறு புறத்தில் "இணையம் புதிதானக் கருத்து பரிமாற்ற சாதனமா"க உருவெடுத்துள்ளதாகவும், புதிய உறவுகளை அது உருவாக்குவதாகவும் கருதுபவர்களும் உள்ளனர்.

கொஞ்சம் வரலாறு

நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதே, வேகமான கருத்துப் பறிமாற்றத்திற்கான வழியாக இருந்த காலத்தில், 'தந்தி' வழித் தொடர்பு - சில நிமிடங்களில் தகவலைத் தெரிவிக்கலாம் - என்பது மிகப் பெரும் விஷயமாகக் கருதப்ப்ட்டது.  தாமஸ் ஆல்வா எடிசன் கூடத் தன் மனைவிக்குத் தந்தி மூலமாகத் தான் முன்மொழிந்தாராம் ! பின்பு, தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் உடனுக்குடன் பேச முடிந்தது. ஒரே நேரத்தில் பல கோடி மக்களிடம் செய்திகளைச் சேர்த்திட "வானொலி"யும், அதன் பின் வந்த தொலைக்காட்சிக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால் இணையம் மட்டுமே, மற்ற கண்டுபிடிப்புகளிலுள்ள எல்லாப் பயன்பாடுகளையும் ஒன்றடக்கியதாக உருவெடுத்தது. அதே நேரத்தில், மற்ற கண்டுபிடிப்புகளிலிருந்து இணையத்தை வேறு படுத்தும் முக்கிய காரணி "பெயரில்லாமல்", தன் அடையாளம் காட்டாமல் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்னும் வசதி. இதனால் ஏற்படும் சமுதாய தாக்கங்களைப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

சமூகப் பயன்கள்

இணையத்தின் சமூகப் பயன்பாடுகளை இரண்டு பிரிவுகளின் கீழ் பிரிக்கலாம்

1. தனி மனிதர்களுக்கான பயன்பாடு
2. அலுவலகங்களுக்கான பயன்பாடு


தனி மனிதர்களுக்கான பயன்பாடு

தனி மனித கருத்து பறிமாற்றத்தில் இணையத்தின் முக்கிய பயன்பாடு - 'ஈ மெயில்' எனப்படும் 'மின்னஞ்சல்'. நலம் விசாரிப்பது தொடங்கி, புகைப்படங்கள் அனுப்புதல், வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தல் என வெவ்வேறு வழிகளில் இணையம் பயன்படுகிறது.

மின்னஞ்சல் தவிர, மக்கள் தன் கருத்துக்களை பதிவு செய்யவும், எழுத்துக்களால் குரல் எழுப்பவும் நல்லதொரு சாதனமாக இணையம் அமைந்துள்ளது. கதை, கட்டுரை, கவிதை எழுதும் திறன் கொண்டோர்க்கும், புகைப்படக் கலையில் தேர்ந்தோர், ஒளிப்பதிவு செய்வோர்க்கும் மேடை அமைத்துக் கொடுக்கிறது.

சமீப காலங்களாக புகழ்பெற்றிருக்கும் சமூக வலைத் தளங்கள் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக உள்ளன.

அயல் நாட்டுக்கு பேசும் தொலைபேசி கட்டண செலவுகளைக் குறைக்க, இணையம் மூலமான வாய்மொழிச் சேவைகள் மிகவும் உதவுகின்றன. இத்தகைய சேவைகள் தொலைபேசியையும் தாண்டி, முகம் பார்த்து பேசக் கூடிய வசதியும் தருகின்றன.

சமீப காலமாக இணையப் பயன்பாட்டில் வேகமாக அதிகரித்து வருவது - வணிகம் - வீட்டிலிருந்த படியே பொருட்களை வாங்கவும், விற்கவும் செய்வதற்கான வசதியாகும்.  2013-ம் ஆண்டில் 1.2 ட்ரில்லியன் டாலருக்கான விற்பனைகள் நடக்கும் என்று கணிக்கப்பட்டது.( நன்றி: http://www.statista.com/ )



அலுவலகங்களுக்கான பயன்பாடு

நிறுவனங்களுக்கு, இணைய தளங்கள் அதன் முகமாகத் திகழ்கின்றன. இன்றைய நிலையில் இணைய தளம் இல்லாத நிறுவனமே இல்லை என்ற நிலை ஏறக்குறைய வந்துவிட்டது. இணையம், நிறுவனங்களுக்கு மிகப்பெரும் வியாபார விருத்தி சாதனமாகத் திகழ்கிறது. சமூக வலைத் தளங்களையும் சிறப்பான முறையில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. மின்னஞ்சல், அலுவலகம் / நிறுவனங்களில் அடிப்படைத் தேவையாகிவிட்டது. உலகெங்கும் விரிந்திருக்கும் ஒரே நிறுவனத்தின் பல கிளைகளை இணைக்கவும், தொடர்பு கொள்ளவும் இணையம் மிகப்பெரும் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. பொருட்களையும், சேவைகளையும் விற்கவும், நிறுவனங்கள் இணையத்தில் இறங்கியுள்ளன.

மற்ற பயன்பாடுகள்

தனி மனித மற்றும் நிறுவனங்களுக்கான பயன்பாடு தவிர மற்ற பயன்பாடுகளை, கீழ்காணும் தலைப்புகளில் வகைப்படுத்தலாம்.

1. புதிய உறவுகள் அமைதல்
2. இணைய குழுக்கள்
3. இதர பயன்பாடுகள்

புதிய உறவுகள் அமைதல்

"நாங்கள் முதன் முதலில் இணையத்தில்தான் சந்தித்தோம்" என்ற சொல்லும் உறவுகள், இனறைய காலகட்டத்தில் பரவலாகக் காணமுடிகிறது. 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்கள், திருமணம் தொடர்பான தளங்கள், அரட்டை அறைகள் போன்றவை முகமே பார்க்காதவரின் அறிமுகங்களைக் கொடுக்கிறது. இதனைத் தவறாகப் பயன்படுத்துவோர் இருக்கிறார்கள் என்றாலும்,  இது மிகப்பெரும் புரட்சியை உருவாக்கியிருக்கிறது. 'அரசனும் ஆண்டியும் இங்கு ஒன்றுதான்' என்னும் சமத்துவக் கொள்கையும் இணையத்தில் இணைந்துள்ளது.


இணைய குழுக்கள்

தகவல் பறிமாற்றத்துக்கான புதுமையான முறையாக 'இணையக் குழுக்கள்' உள்ளன. சமையற் குறிப்புகள் முதல் டைனாசிர், ராக்கெட் செலுத்துதல் வரை எல்லாத் தலப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான குழுக்கள், கருத்துக்களை பகிர உதவுகின்றன. ஒரே விதமான விருப்பங்கள் கொண்டோர்க்கு, எல்லைகள் தாண்டி, உலகெங்கும் சந்தித்துப் பேச இக்குழுக்கள் பெரிதும் உதவுகின்றன.

அரசியல், இயல், இசை, நாடகம் எனப் பல்வேறு துறையினர்க்கும் இணைய குழுக்கள் எளிய சாதனாமாகத் திகழ்கிறது. அறிவியல், கலைத் துறையினருக்கு சந்தேகங்களைத் தீர்க்கும் தகவல் களஞ்சியங்களாகவும் இணையம் உள்ளது.

இதர பயன்பாடுகள்

இந்தக் கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தித் திறமைகளை அடையாளம் காட்டவும், மொழியினை வளர்க்கவும் இணையம் உதவுகிறது. 'யூ ட்யூப்' தளத்தின் மூலமாகவே மதுரையில் இருந்த வில்பர் சற்குணராஜ் உலகெங்கும் புகழ் பெற்றார். புகைப்படங்கள் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டோர்க்கும், பொழுதுபோக்கிற்காக விரும்பி செய்வோரும் இணையம் மூலம் பகிர்ந்து பயன்பெறுகின்றனர்.

இணையத்தின் ஆதிக்கத்திற்கு முன்பாக எந்தத் தலைப்பிலும்  'ஆராய்ச்சி'  செய்வோர்கள், அங்குமிங்கும் அலைந்து பலரை சந்தித்து, புத்தகங்களைத் துழாவித் தகவல்களைச் சேகரித்து வந்தனர். இந்நாட்களில், இணையம் மூலமாக ஆராட்சிகள் செய்வோர்க்கு உட்கார்ந்த இடத்திலேயே பெரும்பாலான தகவல்கள் திரட்ட முடிகிறது.

'கல்வி'த் துறையில் இணையத்தின் பயன்பாடு பாராட்டுக்குரியதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் இணையும் இடமாக இணையம் செயல்படுகிறது. கல்வி நிறுவனங்களும் சுற்றரிக்கைகள் முதல் வீட்டுப் பாடங்கள் வரை எல்லாத் தகவல் பறிமாற்றங்களையும் இணையம் மூலமாகச் செய்கின்றன. பெற்றோர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு இது உதவுகிறது,

பண பறிவர்த்தனைகள் செய்வதற்கும் இணையம் பெரிய அளவில் உதவுகிறது. வங்கிகளில் பணம் இடவும், எடுக்கவும் பெரிய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை மாறிவிட்டது. இணையம் மூலமான வங்கி சேவை மூலம் வீட்டிலிருந்தே பண பரிவர்த்தனைகள் செய்யமுடிகின்றது.

பயணம் செய்வோர்க்கு, செல்லுமிடம் பற்றிய விளக்கங்களையும், வரைபடங்களையும் தந்து அமைதியான பயணத்திற்கு வழி காட்டுகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் இணையத்தின் பயன்பாடு முக்கியமானதாகும். உலக நிகழ்வுகள், பங்கு சந்தை நிலவரங்கள், விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு என பல துறைகளில் உடனுக்குடன் செய்திகள் பரிமாற முடிகின்றது.

அனைத்தையும் தாண்டி, இணையம் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனாமாகவும் திகழ்கிறது. விளையாட்டுகள், புதிர்போட்டிகள், பாடல்கள், நடனங்கள் போன்றவை இணையமெங்கும் பரவி பொழுதுபோக்கு அம்சங்களை வாரி வழங்குகிறது.

முடிவுரை

இவ்வாறாகத் தன் பல்வேறு பயன்பாடுகளால், இணையம் நமது சமூகத்தில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொணர்ந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில், தவறான முறைகளில் பயன்படுத்தி பணம் பறிப்போர்க்கும், மானம் அழிப்போர்க்கும் இணையம் பயன்படுகிறது. இது, இணையத்தின் தவறல்ல. 'கனியிருக்கக் காய்கவரும்' குணம் கொண்டோரை என்ன செய்வது? 'பகிர்தல்' என்றப் பண்பாட்டையே இணையம் தான் உயிர்ப்பித்திருக்கிறது என்று சொல்லலாம். இதுவே இணையத்தின் மாபெரும் சாதனையாகக் கருதலாம். எத்தனையோ வழிகளில் நவயுக வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகி, இன்னும் கண்டுபிடிக்கப் படாத பல பயன்பாடுகளைத் தன்னுள்ளடக்கி 'இணைய வலை' விரிந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.




Thursday, January 2, 2014

ரத்து செய்வதை ரத்து செய்யுங்க !



கண்டவுடன் காதலாச்சாம் கதையைக் கேளுங்க‌ ! - இங்கே
   கணவன், மனைவி ஆகிட்டாங்க இதையும் பாருங்க‌ !
உண்டவுடன் உண்டாகிடும் ஏப்பத்தைப் போல‌ - எல்லாம்
   உடனடியா முடிவுசெஞ்சு நடத்திக் கிறாங்க !

இருமனமும் சேருவதே திருமண மாங்க‌ ! - இங்கே
   விழிகள்பேசி இமைப்பொழுதில் நடந்திடு மாங்க‌ !
பொறுமையில்லை, 'பகிர்தல்'யில்லை அவசரக் கோலம் ! - கொஞ்சம்
   பேசிப்பார்க்க‌ நேரமில்லை 'பரபர'க் காலம் !

கல்யாணமும் முடிஞ்சுமூணு  நாட்களி லேயே ! - மனம்
   கசந்திடுமாம், பார்க்கக்கூடப் பிடிப்ப தில்லையாம் !
எல்லாமுமே முடிஞ்சிடிச்சாம் பிரிய வேணுமாம் ! - ஏதோ
   திருவிழாவை 'ரத்து'செய்தல் போல இதுவுமாம் !

உறவுக்குள்ளே விட்டுக்கொடுத்து வாழ்ந் திடலாமே!- அந்த‌
   உறவினையே விட்டுவிட்டு வாழ்ந் திடலாமா?
பிரிவினிலே சுகமிருக்கா சிந்திக்க வேணும் - நல்ல‌ப்
   'புரிதல்'எனும் பண்பினையே வளர்த்துக்க வேணும் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates