தேர்தல் வந்தால் போதும் !
தெருவிலே வெண்மைக் கோலம் !
மாறுதல் தருவோம் என்று...
வாயிலே வார்த்தை ஜாலம் !
கறைபடி கையோர் எல்லாம்...
கறைபோட்ட வேட்டி தன்னை..
அரையிலே அணிந்தே வருவார் !
அள்ளியே வாக்கும் தருவார் !
டீக்கடை கூட்டம் அள்ளும் !
'டாக்' கடை எனவே மாறும் !
பூக்கடை, காலை மாலை...
முப்போது மாலை விற்கும் !
தலைவர்கள் கொடுக்கும் பேட்டி..
பதியவே நிருபர் போட்டி...!
அலையென கட்-அவுட் போஸ்டர்..
தெருச்சுவர் சேலை மாட்டி !
கத்தையாய் கரன்சி புரளும் !
காவல்ர் கண்டால் அலறும் !
வித்தையாய் காட்சிகள் மாறும் !
தினமொரு நிலையென ஆகும் !
நோட்டுகள் வாங்கிக் கொண்டு
நமக்குஏன் கவலை என்றே
ஓட்டுகள் அளிப்பது தவறு !
உணர்ந்திடு அருமை நண்பா !
வாக்கினை செயலாய் மாற்றும்
வீரனைக் கண்டே உந்தன்...
வாக்கினை பதிவே செய்வாய்...!
நாட்டையும் காத்திடச் செய்வாய் !