.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, December 27, 2013

புத்தாண்டு ப்ரேயர் !



 (சிறுவன் / சிறுமி வேண்டுவது போல் எழுதப்பட்டது)

புதியஆண்டு பிறக்குதாமே சாமி ! - புதுசா
   பூமிக்குநீ என்னதருவ சாமி !
அதிகமாநான் கேக்கலயே சாமி - கொஞ்சம்
   அமைதியாஎன் வேண்டுதலக் கேள்நீ !

உறைஞ்சிருக்கும் பனிமலைகள் அழகா - இந்த‌
   உலகமெல்லாம் படைச்சுவெச்ச  நெறையா !
கரைஞ்சிருச்சே அத்தனையும் குறைவா ! - ஏதோ
   'க்ளோபல்வார்மிங்' காரணமாம் இறைவா !


பச்சைப்பசேல் காடுகளும் அழகா - இந்த‌
   பூமியிலே படைச்சுவெச்ச  நெறையா !
மிச்சம்மீதி தானிருக்கு இப்போ - நெறைய
   கட்டிடங்கள் கட்டிவெச்ச பிறகு !

மாசாமாசம் மூணுதரம் மழையாம் ! - அந்தக்
    காலமெல்லாம் பாக்கலநான் சாமி !
காசாகொட்டி வாங்கறோமே தண்ணி ! - நல்ல‌
   மரத்தையெல்லாம் வெட்டினத எண்ணி !

'பீச்சு'(BEACH)தாண்டி கடலும்உள்ள வருதாம் ! - இது
   தொடர்ந்திச்சின்னா நிலங்கள் குறைஞ்சிவிடுமாம் !
மூச்சுவிடும் காத்து அசுத்தமாச்சாம் ! - இதுக்குப்
    'பொல்யூஷனே'  காரணமா ஆச்சாம் !

சின்னபுள்ள என்னபாத்தா உனக்கு ! - கொஞ்சம்
   பாவமாகத் தோணலயா சொல்லு !
என்னத்தப்பு செஞ்சுபுட்டேன் நானு ! - எங்க‌
   தலைமுறைங்க வாழவழிய சொல்லு !

முன்னவங்க செஞ்ச தப்புக்காக - நான்
   முன்னூறு 'சாரி' சொல்றேன் சாமி !
இன்னொரு'சான்ஸ்' எமக்குகொடு சாமி ! - இனிமே
   இப்படியெல்லாம் செய்யமாட்டோம் சாமி !


இயற்கையெல்லாம் 'ரீசெட்' பண்ணு சாமி ! - முன்ன‌
   நல்லாயிருந்த நெலமைக்குத்தான் மாத்தி !
பயங்கரமா 'ட்ரீட்' வெப்பேன் சாமி ! - நல்லா
  'பட்டர்ஸ்காட்ச்' கேக்கு வாங்கி சாமி !


Sunday, December 8, 2013

மண்டேலா !


ஆப்பிளுக்கும் கருப்புப்பன்னீர் திராட்சைக்கும்
நிறம் வேறு, உரு வேறு, சுவை வேறு !
ஆயினும் இரண்டுமே 'பழம்' தானே !

ஆப்பிரிக்க நாட்டினிலே இதுபோல‌
கருப்பரென சிவப்பரென மனிதரினை
அரசியிலின் ஆயுதத்தால் பிரித்துவைத்தார் !

கொடுமையிதை எதிர்த்துக்குரல் கொடுக்கவொரு
புரட்சிவீரன் போலவந்தார் மண்டேலா...
எழுச்சியுடன் கிளர்ச்சிகளை ஆக்கிடவே !

காரிருளாய் சூழ்ந்தவரின் வாழ்வினிலே
கருப்பரினச் சூரியனாய் ஒளிகொடுக்கத்
தலைவரெனத் தோன்றினாரே மண்டேலா !

சிறுபுத்தி சின்னவரின் சிறுசெயலால்...
சிறைவாசம் கொண்டுபலத் துன்பமுற்றார் !
ஆப்பிரிக்கக் காந்திஅந்த மண்டேலா !


விடுதலையும் பெற்றுத்தந்தார் நாட்டவர்க்கு!
பெருமைதந்தார் அமைதிக்கான நோபலுக்கு !
உலகமக்கள் மனங்கள்ஆண்ட மண்டேலா !

பேரிழப்பே மண்டேலாவின் உயிர்மறைவு !
அவர்கொள்கை கொள்ளவேண்டும் நாம்நினைவு!
மனிதருக்குள் நிறத்தினாலே ஏன்பிரிவு?


Tuesday, November 26, 2013

கனியிருப்ப காய் கவராய் காற்றே !



தென்றலாய் வீசியே எங்கள்
   தேகங்கள் சிலிர்த்திடச் செய்வாய் !
என்றுமே இதமே தருவாய்
   தென்திசை காற்றே நீதான் !

மழைமிகு காலந் தன்னில்
   மனிதர்மேல் சீற்றம் கொண்டு
பிழைபல நட ந்தது போல‌
   புயலெனப் பாய்ந்தே வருவாய் !

புயலெனச் சீறும் போது
  பெரியதோர் சேதம் செய்வாய் !
வயல்வெளி, சாலை, மரங்கள்
   அனைத்தையும் அழித்தே செல்வாய்!

கீற்றிலே வீட்டை வேய்ந்து
   குடித்தனம் செய்வோர் தன்னை
சீற்றத்தில் சூறையும் யாடி
  வீதியில் நின்றிடச் செய்வாய்!

மண்சுவர் வீடுகள் இடித்து
   மனிதர்கள் உயிரைக் குடிப்பாய் !
கண்கவர் காட்சிகள் எல்லாம்
   கணத்திலே சிதைத்தே செல்வாய்!

வான்புகழ் வள்ளுவன் சொன்னான்
   வாய்ருசி கனிகள் இருக்க‌
ஏன்அந்த காய்கள் என்று.....
   நீயதை கேளாய் காற்றே !

மெல்லிய தென்றலாய் வீசு !
   வல்லிய புயலாய் வேண்டாம் !
சொல்லிய வார்த்தை கேட்டு
   செல்லமாய்த் தீண்டிடு காற்றே !

Saturday, November 16, 2013

சச்சினுக்கு சலாம் போடு !

சச்சினுக்கு சலாம் போடு !
   சச்சினுக்கு சலாம் போடு !
மெச்சியவன் புகழைப் பாடு !
   மேளதாளம் போட்டு ஆடு !

பந்துவீசும் வீரர்க் கெல்லாம்
   பட படப்பைத் தந்தவன் !
வந்து பார்க்கும் ரசிகருக்கு
   விருந்து படைத்துத் தந்தவன் !

பரம சிவன் நடனமதை
   பார்த்தது போல் பரவசம் !
திறமை யான டெண்டுல்கரின்
   ஆட்டம் கண்டு களிக்கையில் !

உச்சிவரை உயர்ந் திருக்கும்
   இமய மலை சிகரமும்
சச்சினவன் சாத னைகள்
  நிமிர்ந்து பார்க்க வேண்டுமே !

களம் இறங்கும் போதுதன்
  நூறு சதம் தந்தவன் !
இளம் தலை முறைக்கெல்லாம்
  இறைவ னாகத் திகழ்பவன் !

சாத னையின் மனித உரு
   'சச்சின்' என்று சொல்லலாம் !
வேத னையாய் இருக்கிறதே
   விடை பிரியும் போதுதான் !

நூறு நூறு நொறுக்கியவன் !
   நாட்டின் பெயர் ஏற்றியவன் !
நூறு நூறு ஆண்டுவாழ‌
   நெஞ்சம் வாழ்த்திச் சொல்கிறேன் !

Friday, November 15, 2013

நன்றி !

தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கீழ்காணும் என் கவிதைக்கு வாழ்த்துக்கள் தந்தோர்க்கு நன்றி சொல்ல நான்கு வரிகள் !


வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !

Sunday, September 29, 2013

ஒளி காட்டும் வழி !


தீபங்கள் அணிசேர்க்கும் தீபாவளிப் பண்டிகை !
    தந்திடுமே நெஞ்சினிலே தெம்போடு நம்பிக்கை !
பாபங்கள், பிணி நீக்கும் நீராடும் நதிகங்கை !
   வாழ்த்துக்கள் பறிமாறி சேர்ந்திடும்ஓர்ஆயிரங்கை !


ஒளிர்கின்ற தீபங்கள் காண்பிக்கும் வழிஎன்ன?
    ஜொலிக்கின்ற புத்தாடை சொல்கின்ற குறிஎன்ன?
மிளிர்கின்ற மத்தாப்பு மொழிகின்ற மொழிஎன்ன?
    இனிக்கின்ற தித்திப்பு விளிக்கும் சங் கதிஎன்ன?



வருங்காலம் ஒளிமயந்தான் நமக்கிங்கு என்கிறது !
    மனஅழுக்கு ஆடையினைக் களைந்திடவும் சொல்கிறது !
ஒருபோதும் விலகாத இன்முகந்தான் பார்க்கிறது !
   இன்சொல்லே எப்போதும் சொல்லென்று கேட்கிறது !


ஒளிகாட்டும் வழிதன்னை ஒருசேரக் கண்டிடுவோம் !
    ஒற்றுமையின் வலிமையினால் தடையெதையும் வென்றிடுவோம் !
வழிகாட்டும் மூத்தவராய் நல்வழியில் சென்றிடுவோம் !
    வருங்கால சந்ததியின் உதாரணம் ஆகிடுவோம் !

Friday, August 23, 2013

வாலி !

வாளி வாளியாய் வார்த்தை கொட்டியது - நீ
பாடல் எழுதும் போது !
பாட்டு எழுதுதல் உனக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே !

கவியரசு காலத்திலேயே
புதுமுரசு கொட்டியவன் நீ !

அந்தக் கண்ண தாசனுக்கே
சின்ன பயம் தந்தவன் நீ !

பத்தாறு ஆண்டுதாண்டி
முத்தான பாடற் தந்தாய் !

எத்தனை நாள் ஆயிடினும்
முணுமுணுக்கும்  பாடற் தந்தாய் !

வாலிபக் கவிஞரென
மூத்தோரும் வாழ்த்திட்டார் ! - உன்

சீரிய நடைமுறையை
முன்மாதிரியாய் பார்த்திட்டார்!


சிந்தனைக்கும் ரசனைக்கும்
உன்பாடற் பெரும் விருந்து !

வந்தனைகள் செய்கின்றோம்
எம்மோடு மனமுவந்து !

Tuesday, August 20, 2013

தலைவா !

 நீ வரவேண்டும் ...உனைக் காண வேண்டும்...
என்பதுதான் பலபேரின் ஆசையிங்கு !

நீ வரும் நாளில் மாலையோடு
சிறப்பான பூசையுமுண்டு !

நீ வந்து கையசைத்தால்
மிரளுவார் பலரும்...!

நீ வரமாட்டாய் என்றுசொல்லி
மிரட்டுவார் சிலரும் !

நீ வரும் நேரம் யாரறிவார் ?
அறிந்தவ‌ ரில்லை !

உன் சக்தியினை சரிவரவே
புரிந்தவ‌ ரில்லை !

நீ வரும்போது புவிஅதிரும் !
விலகிடும் புதிரும் !

இறைவா ! என் தலைவா !
 உனைக் காண வேண்டும் !

வா ! வா ! நீ வா வா !  இங்கு
வணங்கினோம் மீண்டும் !

Monday, March 25, 2013

டௌரி கல்யாணம் !


வர வரவே தட்சணைதான் தம்பி - இங்கு
வழக்கமான பழக்கமாச்சு தம்பி ! - இது
தர தரத்தான் பெருகிடுது தம்பி ! - இது
தருபவரின் குற்றமன்றோ தம்பி !

'மளமள ' வென பெற்றோர்கள் தம்பி  ! - தம்
மக்கட்கு மணமுடிக்க எண்ணி !
'பலபல ' வாய் இன்னலுற்றே தம்பி ! - இங்கு
தட்சணைதான் கொடுத்திடுவார் அள்ளி !

'பளபள 'க்கும் பொன்னகைகள் கேளாய் தம்பி ! - நீ
கலகலக்கும் 'புன்னகை'தான் கேட்பாய் தம்பி !
'சிலசில'ராய் சேர்ந்திடுவீர் தம்பி ! - இந்த‌
சிறுசெயலை ஒழித்திடுவீர் தம்பி !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates