.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, June 28, 2015

ஆப் பம் சுட்ட கதை!

 
"பாலா பவன் -க்கு போய் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் ஆப்பம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டது...இப்படி போய் முடியும்ன்னு நெனைக்கவேயில்லை !" - புலம்பினார் பரந்தாமன், தன் நண்பரிடம்...

"என்ன ஆச்சு சார் ! அதுக்கும், இப்ப நீங்க படற அவதிக்கும் என்ன சம்பந்தம்?" - கதையை 'பில்ட் அப்' செய்யும் கேள்வியைத் தொடுத்தார் நண்பர்.

"அத ஏன் கேட்கறீங்க...! ஆப்பம் சாப்பிட்டு வந்த நான் சும்மா இல்லாம...என் சம்சாரத்துக்கிட்ட கேட்டேன்...!"

"என்ன கேட்டீங்க?" - ஏதோ சுவாரஸ்யமான சம்பவம் தொடர இருக்கிறது என்பதை மோப்பம் பிடித்தார் நண்பர்.

----------------

ப்ளாஷ் பேக் (கொசுவர்த்தி காயில் சுற்றுவதாகக் கற்பனை செய்து கொள்ளவும்...)

                                     


----------

பரந்தாமன்: பாலா பவன் ஆப்பம் ரொம்ப நல்லாயிருந்தது இல்ல?

மனைவி: எனக்குகூட புடிச்சுது...ஆனா..இது என்ன பெரிய்ய விஷயம்...நான் கூட வீட்டுலயே செய்வேன்...

பரந்தாமன்: ஒருநாள் செய்யேன் பார்ப்போம்...!

(இரண்டு நாள் கழித்து)

மனைவி: ஏங்க...அமேசான் 'ஆப்' ல ஆப்ப கடாய் வாங்கலாம்ங்க...ஆபர்ல போட்டிருக்கான் !

பரந்தாமன்: இந்த ஆப் எல்லாம் எனக்குத் தெரியாது...நீயே பாத்து வாங்கு...நான் பைசா தர்ரேன்...

மனைவி: நம்ம பையன் மனோகிட்ட சொல்லி அமேசான் ஆப் ல ஆப்ப கடாய் வாங்க சொல்றேன்...

-------
கட் ...கட்...மீண்டும் லைவ்...

-------------
பரந்தாமன் தொடர்ந்தார்...

"மூணாவது நாள் ஆப்ல வாங்கின ஆப்ப கடாய் டெலிவரி ஆச்சு ! பேக்கிங்க பிரிச்சு சம்சாரம் கேட்டா...ஏங்க...இன்னிக்கு ஈவ்னிங் ஆப்பம் செய்யறேன்...சரியான்னு.... நானும் சரின்னு சொல்லிட்டு சாயங்காலம் எப்ப வரும்னு காத்துகிட்டு இருந்தேன்..சாயங்காலமாச்சு...! ஆப்ப கடாயை எடுத்து அடுப்புல வெச்சு...மாவையும் சுத்திவிட்டா...நான் அதுக்குள்ள கிச்சனுக்கு வெளியே இருந்த டைனிங் டேபிள்ல க்ளீன் பண்ணி ரெடி பண்ண ஆரம்பிச்சேன்...டேபிளுக்கு கீழே பேப்பர் குப்பை மாதிரி இருந்துது...அத எடுக்கலாமுன்னு குனிஞ்சேன்..அப்ப என் பின்பக்கம் கிச்சனைப் பாத்து இருந்தது...அதே நேரத்தில கிச்சன் லேர்ந்து ஒரு சத்தம்...ஆ...ன்னு ...நான் நிமிர்ந்து நேராக ஆகறதுக்குள்ள...என் பின் பக்கத்தில (பம்-ல) யாரோ சூடா அடி வெச்ச மாதிரி இருந்தது...நானும் ஆ..ன்னு அலறினேன்...கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு...'என்ன ஆச்சு?'ன்னு கேட்டேன்...என் சம்சாரம் கையை உதறிகிட்டே கிச்சன் லேர்ந்து வெளியே வந்து "என்ன ஆச்சுங்க?'ன்னு என்னைக் கேட்டா...எனக்கு ஒரே எரிச்சல்...நீ என்ன பண்ணினன்னு சொல்லு...ன்னேன்

"கடாய்-ல விட்ட மாவு ஆப்பம் ஆனதுக்கு அப்புறம்..கடாய்லேர்ந்து எடுக்க வரலை..ஆப்பம் வேற கருகிட்டே இருந்துது... ஏதோ நெனப்புல ஒரு கையால புடிச்சுகிட்டு கிண்டிபார்க்கலாம்ன்னு கடாயை கையில தூக்கிட்டேன்...பயங்கர சூடு...அப்படியே கைய உதறி...கடாயை கையிலேர்ந்து வீசி விட்டேன்...உங்க பின்னாடி பட்டுடிச்சு போல..." என்றாள் அப்பாவியாய்...

நண்பருக்கு சிரிப்பு வந்தது...சிரிப்பதா..பரந்தாமனுக்கு ஆறுதல் சொல்வதான்னு தெரியல அவருக்கு...

மனசுக்குள்ளே நெனச்சுகிட்டார்...

"ஆபர்ல  ஆப் ல வாங்கின ஆப்ப கடாய் வெச்ச ஆப்பு...'பம்' - காலி...!

நீங்க என்ன நெனக்கறீங்க? ரெண்டு வார்த்தை எழுதிட்டுப் போலாம் இல்ல?

Saturday, June 27, 2015

ஜோக்ஸ் - பாகம் - 4

"நிலாவில் கால் வைக்கிறேன்னு சொல்லிட்டு எட்டாம் க்ளாஸ் படிக்கிற கதிரவன், அவன் க்ளாஸ்-ல படிக்கிற 'நிலா' ங்கிற பெண்ணை உதைச்சுட்டானாம் !"

"அச்சச்சோ ! அப்புறம் என்னாச்சு?"

"பொண்ணோட அப்பா, 'நான் சூரியன்'-ல கால வெக்கறேன்னு சொல்லி அவனை மிதிச்சு தள்ளிட்டாராம் !"

---------------------------------"யோகா 'டே' - யையும் கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவையும் அவ்ரு ஒண்ணா கடைபிடிக்கிறாராம் !"

"புரியலையே !"

"யோகா செய்யற போது ஹெல்மெட் மாட்டிக்கிறாரே !"

"!!!!"

------------------------------------"ஆறாம் க்ளாஸ் படிக்கிற...ஆனா 'போர்டு எக்ஸாம்'ன்னு சொல்ற?"

"டீச்சர் டெஸ்ட் கேள்வியெல்லாம் 'போர்டு'ல எழுதுவாங்க...அதான்...!"

"???"

---------------------

Wednesday, June 24, 2015

இணையத் தமிழே இனி..!

ரூபன் - யாழ்பாவாணன் நடத்திய சித்திரை கவிதைப் போட்டிக்காக எழுதியது:

பன்மொழியின் ஊடகமாம் இணையமது ! - அதில்
    படித்திடவும், பார்த்திடவும்  விடயம்பல...!
நன்மொழியாம் செந்தமிழில் ஆக்கங்களை...- அதில்
    நாடோறும் படைத்திடுவார் கலைஞர்பல...!

ஆங்கிலமே கணிணியதன் மொழியெனவே - இங்கு
    ஆண்டாண்டாய் இருந்தநிலை மாறியதே !
பாங்குடனே செம்மொழியின் ஆர்வலர்கள்... - இங்கு
     பாடுபட்ட முயற்சியதன் திருப்பயனால் !

"யூனிகோடு" என்னும்குறி யீட்டுமுறை... - அது
   யாவருக்கும் பயன்கொடுக்கும் உள்ளீட்டுமுறை !
தேனியுடன் தேன்சுவைக்குப் போட்டியிடும்.. - மறத்
   தமிழர்மொழி இணையம்வர எளியமுறை !

செம்மொழியில் பூக்கும்வலைப் பூக்களென்ன ! - தினம்
   சேர்ந்துவரும் மின்னியலின் நூல்களென்ன...!
எம்மொழிக்கும் எங்கள்மொழி சளைத்ததி(ல்)லை ! - அட..
   எம்மொழிக்கு ஈடுஇணை ஏதுமில்லை!

இணைந்திடுவோம் இணையிலாத தமிழினமே ! - இங்கு
   இன்னும்பல சரித்திரங்கள் படைத்திடவே !
இணையத்தமிழ் இன்னும்புது வேகம்பெறும் - நம்
   சிந்தனையை உலகமெலாம் சேர்த்துவிடும் !

Tuesday, June 23, 2015

எமலோகப் பதவி - நாடகம் - இறுதிக் காட்சி

 காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 8,9 - படிக்க இங்கே சொடுக்கவும்

முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.comகாட்சி - 10                  இடம்: எமலோகம்


சி.கு: எமதர்மராஜனே ! வணக்கம்...! நீங்கள் சொன்னபடி, பட்டியலுடன், அதை வைத்திருந்த இந்த மானுடனையும் அழைத்து வந்து விட்டேன் !

எமன்: ஹா...ஹா...! இவன் தானா அது ! அவன் கையில் என்ன ஒரு சாதனம்?

சி.கு: அது கௌண்டராம் !

தேவ்: அது கௌண்டர் இல்ல...கம்ப்யூட்டர்...நான் இதில எழுதியிருக்கிற ப்ரோக்ராம் வெச்சு என்னென்ன பாவங்கள் செஞ்சா என்னென்ன தண்டணை-ன்னு சொல்லலாம்...

எமன்: ஆஹா..! அப்படியா ! ப்ரமாதம் மானிடா ! உன் பெயர் என்ன?

தேவ்: என் பெயர் தேவதாஸ்...!


படம்: நன்றி: கூகுள்

எமன்: தேவதாஸ்...! நல்ல பெயர்..உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...! இனிமேல் நீதான் என் சித்ரகுப்தன் !

சி.கு: பிரபு ! அப்படியென்றால் என் கதி!?

எமன்: உனக்கு இந்த பதவியிலிருந்து ஓய்வு தருகிறேன் ...! நீ விரும்பினால், இங்கேயே தங்கி அமைதியாக வாழலாம் ! இல்லையென்றால், பூலோகத்தில் மானிடனாகப் பிறக்கலாம் !

சி.கு: எமதர்மனே ! இது அநியாயம்...!

எமன்: (உரக்க) சித்ரகுப்தா !

சி.கு: (திமிராக) சொல்லுங்கள்..!

எமன்: நான் உன்னை அழைக்கவில்லை...! என் புதிய சித்ரகுப்தனை அழைத்தேன்..தேவதாஸ் ! எமனையே எதிர்த்துப் பேசிய இவனுக்கு என்ன தண்டனை என்று, உன் கம்ப்யூட்டரைக் கேட்டு சொல்லு...!

தேவ்: இதோ உங்கள் ஆணை ராஜனே !....ம்...கம்ப்யூட்டர் படி, இவரை இங்கிருந்து கீழே..பூலோகத்திற்குத் தள்ளிவிடவேண்டும் !

எமன்: ஹா...ஹா ! யாரங்கே ! வாருங்கள் ! என்னிடம் திமிர் காட்டிய இவனை கீழே தள்ளுங்கள் !

சி.கு: எமதர்மனே ! கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்...! நான் அழைத்து வந்து மானிடனே ! இது உனக்கே தர்மமா?

எமன்: ம்...இன்னும் என்ன தாமதம்? தள்ளுங்கள் அவனை கீழே !

(சித்ரகுப்தன் கீழே தள்ளப் படுகிறான்...அலறல் சத்தம்...ஆ.....)

தேவ்: எமதர்மனே ! இந்த எமலோகப் பதவி எனக்கு கிடைத்த செய்தியை என் தந்தையிடம் சொல்லவேண்டும். சொல்லிவிட்டு வரவா?

எமன்: ஹா..ஹா...ஹா...! நீ செல்ல வேண்டிய தேவையில்லை...இதோ பார் உன் தந்தையை...! ஹா...ஹா...

தேவ்: அ...அப்பா ! இதோ பாருங்க! எனக்கு வேலை கிடைத்துவிட்டது..!

எமன்: சித்ரகுப்தா...இவர் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை சொல்...

தேவ்: (தயக்கத்துடன்) த..தண்டனையா? எங்க அப்பாவுக்கா ! வேண்டாம்..வேண்டாம்..!

எமன்: என்ன தயக்கம் சித்ரகுப்தா ! பாசம், பந்தம் கொண்டாட இது பூலோகம் இல்லை...உன் வேலையை ஒழுங்காகச் செய்...!

தேவ்: (சமாளிக்கும் முயற்சியில்)...எமதர்மா...கம்ப்யூட்டர் சொல்படி இவரை....வேண்டாம்...எமதர்மா...! எங்க அப்பாவ ஒண்ணும் செய்யவேண்டாம்...வேணும்னா அவருக்கு பதிலா...நான்...எண்ணெய் சட்டியில் வறுபடுகிறேன்..!

எமன்: என்ன இது சித்ரகுப்தா ! உன்னை நம்பி என் பழைய சித்ரகுப்தனையும் தள்ளிவிட்டுவிட்டேனே !...(ஏதோ சத்தம் கேட்க....) ம்...யாரங்கே?

சி.கு: எமதர்மனே ! நான் தான் முன்னாள் சித்ரகுப்தன்...! கீழே தள்ளப்பட்ட நான்...ஒரு வீட்டு மாடியில் உலர்ந்து கொண்டிருந்த படுக்கையில் விழுந்துவிட்டேன் ! அதனால் உயிர் பிழைத்தேன் ! மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன் !

எமன்: தேவதாஸ் ! உனக்கு இன்னும் ஆயுள் முடியவில்லை ! அதனால் நீ மீண்டும் பூலோகம் சென்று வாழலாம். உன் விருப்பத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கும் !

தேவ்: மிக்க நன்றி ராஜனே !

எமன்: என் முன்னாள் சித்ரகுப்தா...! நீதான் இனி எந்நாளும் என் சித்ரகுப்தன் !

சி.கு: நன்றி ! எமதர்மனே !

எமன்: தேவதாஸ் ...!ம்...நீ போகலாம் !

தேவ்: நான் செல்கிறேன்...! என் அப்பா?

எமன்: அவரோட ஆயுள் முடிந்து விட்டது தேவதாஸ்...நீ மனதைத் தேற்றிக்கொண்டு பூலோகம் செல்...அந்த கம்ப்யூட்டரை இங்கேயே வைத்துவிட்டுப் போ ! எனக்கு பொழுது போகாத நேரத்தில் விளையாடுவேன் !

தேவ்: எமதர்மா ! மன்னிக்க வேண்டும்...! என் அப்பாவும் இல்லாமல், கம்ப்யூட்டரும் இல்லாமல்...பூலோகத்தில் நான் என்ன செய்வேன் ! நான் இங்கேயே இருந்து விடுகிறேனே !

எமன்: ஹா...ஹா..ஹா ! உன் இஷ்டம் தேவதாஸ்..! அப்படியே ஆகட்டும் ! இனிமேல...எனக்கு இரண்டு சித்ரகுப்தர்கள்....! ஹா...ஹா...ஹா...!                                                         (முற்றும் )


Monday, June 22, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்


காட்சி-8                      இடம்: தேவதாஸ் வீடு

அப்பா: தேவதாசு ! தேவ்...! எங்கே போனான்..? ஊர் மேயப் போய்ட்டான் போல...ம்...பொறுப்பில்லாத புள்ள...

(வாசலில் சத்தம் - டக்...டக்...)

யாரது...? யாரு...?

குரல்: கதவைத் திறவுங்கள் ஐயா !

அப்பா: அ...அ...நீயா...! அன்னிக்கு தெருவுல ஏதோ தேடிகிட்டு இருந்தாயே ! நீதானே !

சி.கு: ஆம்...நானேதான் ஐயா !

அப்பா: உள்ளே வந்து உட்காருங்க...! என் பையன் கூட உங்கள பார்க்கணும்-னு சொன்னான்...

சி.கு: ஐயா ! நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வருகிறேன்...!

அப்பா: (திடுக்கிட்டு) என்ன சித்ரகுப்தனா? ஆனா...எனக்கு...இன்னும் ஆயுசு...மு...முடியலையே !

சி,கு: ஹா...ஹா...பதட்டப் படாதீர்கள்...! நான் உங்கள் ஆயுள் முடிக்க வரவில்லை. ஒரு முக்கியமான பட்டியல் தொலைந்துவிட்டது...அதைத் தேடித்தான் வந்தேன்...! அதோ...! ஒரு நவீன சாதனம் இருக்கிறதே ! அதை இயக்குவது யார்?

அப்பா: அதுதான் கம்ப்யூட்டர்....என் பையன் தான் ஆப்ரேட் பண்ணுவான்...அந்தப் பட்டியலும் அவன் கிட்டதான் இருக்கு...ஆனா..அவன ஒண்ணும் செஞ்சுடாதே !

சி.கு: ஹா...ஹா...உங்கள் மகனை நான் பார்க்கவேண்டுமே !

அப்பா: (பரபரப்புடன்) அவன் எங்கே போனான்-னு தெரியல...இதோ தேடிப் பார்க்கிறேன்...!

சி.கு: நல்லது ஐயா !

(அப்பா வெளியே வருகிறார் - தேவதாசும், பாபுவும் ஓடி வருவதைப் பார்க்கிறார்)

அப்பா: என்னாச்சுடா தேவதாசு...இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற...! உன்ன யாராவது எமதூதர்கள் துரத்தறாங்களா?

தேவ்: என்னப்பா ஆச்சு...! இப்படி அபத்தமா கேட்கறீங்க?

அப்பா: சரி...வா...வா...! எமலோலத்திலேர்ந்து உன்னை பார்க்க...சித்ரகுப்தன் வந்திருக்காரு...!

தேவ்: என்னப்பா ஆச்சு உங்களுக்கு ! வந்ததிலேர்ந்து...எமன்...எமலோகம்-ன்னு பேசிகிட்டு...

அப்பா: சரி...நீ உள்ளே வா...!உனக்குப் புரியும் ...!

--------------காட்சி முடிவு-------------------


காட்சி - 9          இடம்: தேவதாஸ் (கம்ப்யூட்டர் மாமா) வீடு

(தேவதாஸ், தன் அப்பாவுடன் தனது வீட்டுக்குள் நுழைகிறான்...சித்ரகுப்தன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறான்)

சி.கு: வாருங்கள் அன்பரே !

தேவ்: யார்யா இது? என் வீட்டுல எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துகிட்டு, என்னையே வா-ன்னு கூப்பிடறது?

சி.கு: நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வந்துள்ளேன் ! நான் எமலோகத்திலிருந்து தவற விட்ட பட்டியல்...

தேவ்: ஓ ! நீங்கதானா அது ? ! அந்த பட்டியல் என்கிட்டதான் இருக்கு...அதை நான் உங்ககிட்ட கொடுக்கணும்னா - எனக்கு ஒரு உதவி செய்யணும்..

சி.கு: என்ன அது அன்பரே?

தேவ்: ஒரு நல்ல கம்பெனியில் ஒரு நல்ல பதவியில் எனக்கு வேலை கிடைக்க வழி செய்யவேண்டும்...!

சி.கு: பட்டியலோடு, உங்களையும் அழைத்து வரவேண்டும் என்பது ராஜனின் உத்தரவு...!

தேவ்: எ....என்னது? நானும் வரணுமா?

சி.:கு: பதட்டமோ, பயமோ வேண்டாம் அன்பரே !

தேவ்: பயமா? நான்...ப...பயப்படலாம் இல்ல..

சி.கு: அப்ப வேறு என்ன? வாருங்கள் போகலாம்...!

அப்பா: டேய் ! தேவதாஸ் ! என்னை அனாதையா விட்டுட்டுப் போயிடாதடா !

தேவ்: அப்பா ! நீங்கதான எனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது-ன்னு சொன்னீங்க..எனக்கு அடுத்த ஜென்மத்திலயாவது வேலை கிடைக்கட்டும்...! சித்ரகுப்தரே ! பிடியுங்கள் பட்டியலை...புறப்படுங்கள்...! என் கம்ப்யூட்டரையும் எடுத்துக் கொள்கிறேன்....எனக்குப் பொழுது போகும்..!

அப்பா: தேவதாசு...தேவா...தே...! (மார்பை பிடித்துக் கொண்டு விழுகிறார் - தேவதாசும், சித்ரகுப்தனும், கம்ப்யூட்டருடன் புறப்பட்டுவிட்டார்கள்)

----------காட்சி முடிவு-------------------(முடிவு என்ன என்பதை அறிய நாளை வரைக் காத்திருக்கவும்....தொடரும்)

Sunday, June 21, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்


முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com


காட்சி - 6                               இடம்: ஒரு சாலை

சி.கு:(தனக்குள்)  ஷ்...! பரந்து கிடக்கும் இந்த் பூலோகத்தில் எங்கென்று தேடுவது? பூமிக்கு வந்ததும் என் தேவ லோக சக்திகள் எல்லாம் நினைவில் வர மாட்டேன் என்கிறது ! எமதர்மனிடம் உதவி கேட்க வேண்டியதுதான்...

பிரபு ! நான் தான் சித்ரகுப்தன் பேசுகிறேன்... அந்தப் பட்டியலைத் தேடித் தேடி அலுத்துவிட்டேன்...நான் மீண்டும் உங்களிடமே வந்து விடுகிறேனே !

எமன்: இங்கே வருகிறாயா? ஹா...ஹா...அப்போது பட்டியல்?

சி.கு: பட்டியல்...பட்டியல்...பிரபு ! உங்களைக் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை ! அந்த பட்டியல் போனால் என்ன? வேறு ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வோமே !

எமன்: சித்ரகுப்தா ! உன் இஷ்டத்திற்கு புது பட்டியல் எல்லாம் செய்ய முடியாது. தொலைந்து போனதைத் தேடி எடுத்து வா ! உனக்கு நான் இங்கிருந்தே உதவுகிறேன் !

சி.கு: உதவி செய்யுங்கள் பிரபு ! உதவி !

எமன்: ஹா...ஹா...! என் சக்தியை பயன்படுத்திப் பார்த்ததில், அந்த பட்டியல் நீ இருக்கும் ஊரில்தான் ஒருவனிடம் இருக்கிறது. அவனிடம் ஒரு நவீன சாதனமும் உள்ளது...பட்டியலுடன், அவனையும் நம் உலகத்துக்கு அழைத்து வா ! ஹா....ஹா...!

சி.கு: உதவிக்கு நன்றி பிரபு ! என் பதவி...?!

எமன்: சித்ரகுப்தா ! நீ வரும் வரை அந்த பதவி உனக்குத் தான்...கவலைப்படாதே !

சி.கு: நான் வந்த பிறகு...?

எமன்: அதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் !

சி.கு: நன்றி...ராஜனே ! நன்றி...!

(மீண்டும் தேடுதல் தொடர்கிறது....)

--------------காட்சி முடிவு--------------------

காட்சி - 7                இடம்: தேவதாஸ் (கணிணி மாமா) வீடு

பாபு: கம்ப்யூட்டர் மாமா ! கம்ப்யூட்டர் மாமா !  நீங்க இன்னும் கிளம்பலயா?

தேவ்: ஷ்...! சத்தம் போடாதே ! எங்க அப்பா சரியான 'மூட்'-ல இல்ல...ரொம்ப கோபமா இருக்காரு...அந்த ரூம்-லேர்ந்து என்ன சொல்றார் கேளு...!

அப்பா: சரியான உதவாக்கர ! எப்ப பாரு...அந்த கம்ப்யூட்டரைக் கட்டிகிட்டு உட்கார்ந்திருக்கான் ! டேய் ! என் வாயாலயே சொல்லக்கூடாது...இருந்தாலும் சொல்றேன் ! ரொம்ப பெரிய்ய படிப்பு படிச்சு புட்டதா நெனச்சு, "பெரிய பதவி என்னைத் தானா தேடி வரும்"-ன்னு சொல்லிகிட்டு இருக்கியே...உனக்கு எமலோகப் பதவி கிடைக்கிற வரைக்கும், இந்த பூலோகத்தில ஒரு பதவியும் கிடைக்காது...!

தேவ்: பாபு ! கேட்டியா ! அன்னிக்கு என்னடா-ன்னா "இந்த ஜென்மத்துல உனக்கு வேலை கிடைக்காது-ன்னாரு...இன்னிக்கு...இப்படி...

பாபு: சரி மாமா ! நான் போயிட்டு அப்புறமா வர்றேன்...!

தேவ்: பாபு..இருடா ! அந்த க்ரீடம் வெச்ச ஆள 'பூத்'-ல பார்த்தேன்-னு சொன்னியே ! அவனை இன்னிக்குத் தேடி கண்டுபிடிச்சே ஆகணும்...

பாபு: கவலைப்படாதீங்க ! அவன நான் அடையாளம் காட்டறேன் !

தேவ்: வா...! வா...! என்னோட...இப்படியே இந்த பக்கமா வீட்டை விட்டு வெளியே போயிடலாம்...அப்பாக்குத் தெரியாது...!

(இருவரும் வெளியே செல்கிறார்கள் - சாலை ஒன்றில்...)

தேவ்: அப்பாவுக்குத் தெரியாம இவ்ளோ தூரம் வந்தாச்சு ! அந்தக் க்ரீட மண்டையனை இன்னும் கண்டுபிடிக்க முடியலையே !

பாபு: அதோ பாருங்க அங்கிள் ! அந்த ஆளுதான்...

தேவ்: ம்...அவனா ! ஆமாம்...தலையில க்ரீடம்...ராஜா மாதிரி வேஷம்... சரி வா ! கிட்ட போய் கேட்போம் !
(அவனருகில் சென்று) ஹலோ ! என்ன தேடறீங்க...நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்...!

தேடுபவன்: அது வந்து...ஒரு பேப்பர்..

தேவ்: காகிதமா...என்ன அது..? ஏதாவது லிஸ்டா?

தேடுபவன்: ஆமாம்...ஆமாம்...உனக்கு எப்படி தெரியும்?

தேவ்: அந்த லிஸ்ட்-ல என்ன எழுதியிருக்கு-ன்னு சொல்லட்டா?  டேய் ! உண்மைய சொல்லு ! 10:15-க்கு சாவு...10:16 க்கு சாவு-ன்னு அந்த லிஸ்ட்-ல் எழுதி வெச்சிருக்கியே...நீ யாரு...உண்மைய சொல்லலைனா போலிஸ்-க்குப் போவேன்...

தேடுபவன்: ஐயயோ ! போலிஸ்-க்கு எல்லாம் போயிடாதீங்க...! நான் ஒரு நடிகன்...!

தேவ்: அதான் நல்லா நடிக்கிறயே !

தேடுபவன்: தம்பி ! எனக்கு உண்மையிலயே ஒண்ணும் தெரியாது....'சுமங்கலி நாடக சபா' நடத்துற நாடகத்தில சித்ரகுப்தன் வேஷத்தில நடிக்கிறேன்...அதான் இந்த மேக்-அப் !

தேவ்: அப்ப...நீங்க தேடின அந்த பேப்பர்?

தேடுபவன்: நாடகத்துல பேச வேண்டிய டயலாக் ஸ்க்ரிப்ட்...வசனத்தை மனப்பாடம் செய்யறதுக்கு எடுத்துகிட்டு வந்தேன்...எங்கேயோ பறக்க விட்டேன் போல...!

தேவ்: டேய் பாபு ! என்னடா இது...!

பாபு: அப்படீன்னா..இந்த ஆளு இல்ல போலிருக்கு மாமா !

தேவ்: கிழிஞ்சுது போ...! இதான் சின்னப் பசங்கள எல்லாம் நம்பி ஒரு காரியமும் செய்யக்கூடாது....அப்ப..சாரி-ங்க...உங்க டயலாக் ஸ்கிரிப்ட் பத்தி எங்களுக்குத் தெரியாது...சாரி...நாங்க வ்ர்றோம்...!

தேடுபவன்: போலிஸ்...! போலிஸ்...! என்னை அடிக்கிறாங்க...!

தேவ்: டேய் பாபு...ஓடுடா...! இவன் நம்மள மாட்டிவிட்டுடுவான் போல...

(ஓடுகிறார்கள்)

----காட்சி முடிவு.....

Saturday, June 20, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com


காட்சி - 3                                           இடம்: பாபு வீட்டு டெலிஃபோன் பூத்

சி.கு: (தனக்குள்) அப்பாடா ! பூலோகம் வந்தாகிவிட்டது !...(சலிப்புடன்) ம்...! பூலோகம் வந்தாலென்ன...! மனமெல்லாம் அந்த எமலோகத்திலேயே இருக்கிறது ! ஒருவேளை, எதற்கும் அஞ்சா எமதர்மன், வேறு யாரையேனும் என் பதவியில் அமர்த்தியிருப்பானோ?! சந்தேகமாகத்தான் இருக்கிறது...! என்ன செய்வது? ம்...அதோ ! ஒரு தொலைபேசியகம்...! அங்கிருந்து எமனிடம் தொடர்பு கொள்வோம் !

('பூத்'-தில்)

தம்பி ! கொஞ்சம் எமலோகத்திற்குப் பேச வேண்டும் !

பாபு: என்னது? எமலோகத்திற்கா? 'கோட் நம்பர்' தெரியுமா?
சி.கு: ஓ ! தெரியுமே ! நான் பேசிக் கொள்கிறேன் ! (டயல் செய்கிறான்)
எமதர்ம ராஜனே ! நான் பூலோகத்திலிருந்து சித்ரகுப்தன் பேசுகிறேன் ! விரைவில் தொலைந்து போன பட்டியலைக் கண்டுபிடித்து வருகிறேன். அதற்குள் அவசரப்பட்டு....(தயக்கம்)

எமன்: (கோபத்தில்) என்ன அவசரப்பட்டு...?

சி.கு: எனக்கு பதிலாக வேறொருவரை நியமித்து விடாதீர்கள் !

எமன்: நீ திரும்பி வரும் வரை அது போல் எதுவும் செய்ய மாட்டேன் ! கவலைப் படாதே !

சி.கு: நன்றி ராஜனே ! (போனை வைத்து விட்டு...) அப்பா ! ஒரு கவலை தீர்ந்தது ! இனி தேட வேண்டியதுதான்...! தம்பி...! தம்பி ! இவன் எங்கே சென்றான்...? சரி...சரி...நம் வேலையைப் பார்ப்போம்...! (நகர்கிறான்)

(கணிணி மாமா வீட்டில் பாபா - பரபரப்புடன் ஓடி சென்று)

பாபு: மாமா ! மாமா ! யாரோ ஒரு ஆளு ! பைத்தியம் போலிருக்கு ! என்னவோ பெரிய ராஜாவாட்டம் க்ரீடமெல்லாம் வெச்சுகிட்டு வந்து, எமலோகத்துக்கு போன் போடறேன்-னு சொல்றான்...! சீக்கிரம் வாங்களேன் !

(இருவரும் 'பூத்'-துக்கு வந்து பார்க்கிறார்கள். அங்கு யாரும் இல்லை)

மாமா: என்னடா ! இங்க ஒருத்தரையும் காணும் ! ஏதாச்சும் கனவு கண்டயா?

பாபு: இல்ல மாமா ! நெசமா பாத்தேன்...இங்க தான் !

மாமா: சரி ! சரி ! காசு கொடுக்காம போன் பேச இது ஒரு ஐடியா போலிருக்கு...எனக்கு வேலை இருக்கு...நான் வர்றேன்...

பாபு: சரி மாமா !

----------------காட்சி முடிவு -------------------

காட்சி - 4                               இடம்: தேவதாஸ் வீடு

அப்பா: டேய் ! தேவதாஸ் ! தேவதாஸ் ! (தனக்குள்) ஓஹோ ! தேவதாஸ்-ன்னு சொன்னா இவருக்குப் பிடிக்காதே ! (உரக்க) என் கம்ப்யூட்டர் மவனே !

தேவ்: என்னப்பா?

அப்பா: நான் கொஞ்சம் மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வர்ரேன் ! வீட்டைப் பாத்துக்கோ !

தேவ்: சரிப்பா !

(அப்பா வீட்டை விட்டு வெளியில் வந்து நடக்கிறார்)

அப்பா: (தனக்குள்) என்னது ! காலையிலேயே இந்த வெயில் அடிக்குது ! ஊப்ஸ்...மார்க்கெட்-டுக்கு வேற இன்னும் அரை மைல் நடக்கணும்...! ம்...யாரது ? தேவ லோக ஆளு மாதிரி வேஷம் போட்டுகிட்டு ரோட்-டுல அலையறான் ! ம்...ஏதோ தேடற மாதிரி இருக்கு ! என்னதான் தேடறான்...! போயி விசாரிப்போம் !

(தேடுபவரிடம்) ஹலோ ! என்ன தேடறீங்க?

சி.கு: ம்...அது ஒன்றுமில்லை ! ஒரு பட்டியிலிட்ட காகிதம் !

அப்பா: (சிரித்தவாறு) ஹா...ஹா...! வீட்டுல பொண்டாட்டி எழுதி கொடுத்த லிஸ்டை தொலைச்சுட்டீங்களா? நல்லாத் தேடுங்க...! ஹா..ஹா ! (சிரித்துக் கொண்டே நகர்கிறார்)

சி.கு: (தனக்குள்) ம்..! எனக்கு இதெல்லாம் தேவையா ! ம்...! சரி...! தேடுவோம் ...!

-----------காட்சி முடிவு -------------------


காட்சி - 5                    இடம்: தேவதாஸ் வீடு


அப்பா: தேவதாஸ் ! டேய் தேவ்...! என் கம்ப்யூட்டர் மவனே ! இங்க வாடா ! இந்த 'ஜோக்'க கேளு !

தேவ்: என்னப்பா ஆச்சு?

அப்பா: மார்க்கெட் போற வழியில...இன்னிக்கு ஒரு ஆளு...ராஜா மாதிரி க்ரீடமெல்லாம் வெச்சுகிட்டு...ஏதோ...லிஸ்ட்- காணும்-ன்னு தேடிகிட்டு இருந்தான் ! அவன் முகத்தைப் பார்க்கணுமே ! அப்படியே எம கலை ! ஹா..ஹா !

தேவ்: என்னப்பா சொல்றீங்க? லிஸ்ட்-டை தேடிகிட்டு இருந்தானா? அந்த ஆளு எங்க்ப்பா? அவனைப் பார்க்கணும் !

அப்பா: நீ ஏன்டா அவனைப் பார்க்கணும்-ங்கிற?

தேவ்: அப்பா ! அந்த லிஸ்ட் - என்கிட்டதான் இருக்கு !

அப்பா: அவன் பொண்டாட்டி போட்ட மளிகை சாமான் லிஸ்ட், உனக்கு எப்படிடா கிடைக்கும்? ஹா,,ஹா...!

தேவ்: அது மளிகை சாமான் - லிஸ்ட்-டுன்னு அவன் சொன்னானா?

அப்பா: அதானே ! இல்லையே ! நானா நெனச்சுக் கிட்டேன்  போலிருக்கு !

தேவ்: என்னோட வாங்க இப்போ ! அவனைக் காட்டுங்க...!

(வீட்டிலிருந்து வெளியேறி நடக்கிறார்கள்)

அப்பா: அவன...இங்கதான்டா பார்த்தேன் !

தேவ்: அப்பா ! நெசமாவா இல்ல ப்ரமையா?

அப்பா: இல்லடா ! கண்டிப்பா பார்த்தேன்...! இங்கதான் !

தேவ்: சரி வாங்க ! இப்படியே கொங்சம் தூரம் தேடிப் பார்ப்போம் !


----------------காட்சி முடிவு---------------------------------(தொடரும்)

Friday, June 19, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 -படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2                         இடம்: பூலோகத்தில் "கணிணி மாமா" வீடு


அப்பா: தேவதாஸ்...! ஏ..! தேவதாஸ் ! ஏன்டா...இங்கதான இருக்க...ஏன்-னு கேட்டா என்னடா?

தேவ்: அப்பா...! என்னப்பா இது பேரு...! தேவதாஸ்...பார்வதி-ன்னு...! ஊர்ல எல்லாரும் கூப்பிடற மாதிரி, நீங்களும் என்னை கம்ப்யூட்டர் மாமா-ன்னு கூப்பிடுங்க..! அப்பதான் பதில் சொல்வேன் ...

அப்பா: ஏன்டா...நீ என்ன எனக்கு மாமாவா?

தேவ்: அப்ப...கம்ப்யூட்டர் மவனே-ன்னு கூப்பிடுங்க...!

அப்பா: ஏன்டா...இன்னிக்கு ஏதோ வேலைக்கு இன்டர்வ்யூ வந்துதே...போகலியா?

தேவ்: இதெல்லாம் என்னப்பா வேலை...! என் ரேஞ்சுக்கு எடுத்த எடுப்புலியே பெரிய்ய...வேலைக்குத் தான் போவேன்...

அப்பா: ஓஹோ...இது வேறயா...!அப்ப உனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது...!

தேவ்: தேவையில்லப்பா ! எனக்கு இந்த கம்ப்யூட்டர் இருக்கு...இது எனக்கு சோறு போடும் ! இப்ப கூட பாரு...என்னென்ன பாவம் செஞ்சா என்னென்ன தண்டனை கிடைக்கும்-ன்னு சொல்ற ஒரு சாஃப்ட்வேர் பண்ணிகிட்டுயிருக்கேன்...! மவனுக்கு வேலை கிடைக்காது-ன்னு சொன்ன அப்பனுக்கு என்ன தண்டனை தெரியுமா? எண்ணெய் சட்டியில போட்டு வறுப்பாங்க...! ஹா...ஹா...!

(அப்பா முணுமுணுப்புடன் அங்கிருந்து நகர்கிறார் - பக்கத்து வீட்டுப் பையன் பாபு வருகிறான்)

பாபு: கம்ப்யூட்டர் மாமா ! எனக்கு இந்த பேப்பர்-ல பட்டம் செங்சு கொடுங்க மாமா !

தேவ்: என்னது பட்டமா...இங்க கொண்டா...(பேப்பரை வாங்கி படிக்கிறான்)
(தனக்குள்): ம்....இறப்போர் பட்டியல்...! என்னடா இது...! புதுசாயிருக்கு...! வாக்காளர் பட்டியல்தான் கேள்விப்பட்டிருக்கோம்...இது என்ன...! (படிக்கிறான்) 10-ம் தேதி - 10:16 மணிக்கு சாலை விபத்தில் இறப்பவர்கள்: சுஜாதா, கந்தசாமி, ஜோசஃப், இப்ராஹிம்,...10-ம் தேதி 10:17க்கு திருபுவனம் தங்கராசு...! என்னடா இது...! யாராவது கொலைகாரன் ப்ளான் போட்டிருக்கானா? ம்...புரியலயே ! எதுக்கும் இந்த பேப்பர் நம்மகிட்டயே இருக்கட்டும் !

(பாபுவிடம்): பாபு...! உனக்கு வேற பேப்பர்ல பட்டம் செஞ்சு தர்றேன் சரியா? ம்?

பாபு: சரி மாமா !

தேவ்: (பட்டம் செய்கிறான்)...இந்தா பட்டம்...கொஞ்சம் இரு...அதுல எம்.பி.பி.எஸ்-ன்னு எழுதித் தரேன்...சின்ன வயசிலயே டாக்டர் பட்டம் வாங்கினவன் நீதான்...! போய்ட்டு வா...!

பாபு: தாங்க்ஸ் மாமா !

-------------------------காட்சி முடிவு--------------   (தொடரும்...)

Thursday, June 18, 2015

எமலோகப் பதவி - நாடகம்

(1995-ல் வெளியான 'லக்கிமேன்' என்ற தமிழ் திரைப்படத்தை மாதிரியாகக் கொண்டு, அந்த சமயத்தில் நான் எழுதிய நாடகம்:)காட்சி - 1                            இடம்: எமலோகம்


எமன்: சித்ரகுப்தா ! என்ன இது? பூலோகத்தில் இரண்டு நாட்களாக யாருமே இறக்கவில்லையா !

சி.கு : அது வந்து....ப்ரபு....

எமன் (கோபத்தில்): ம்...! வரவர உனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது...! ம்...நீ என்ன செய்வாய் ! உனக்கும் வயதாகி விட்டது...நீ வேலையிலிருந்து...தானாகவே ஓய்வு பெற்றுக் கொள்...!

சி,கு (அதிர்ச்சியில்) : ப்ரபு ! என்ன சொல்லிவிட்டீர்கள் ! என்னை விட வயதில் மூத்தவரான நீங்களே இன்னும் ஓய்வு பெறவில்லை ! உங்களுக்குப் பிறகுதானே நான் ஓய்வு பெறவேண்டும் !
எமன் (கோபத்தில்): ம்...! என்ன உளறுகிறாய்?

சி.கு: எமதர்மனே ! நான் இப்படி தங்களின் உதவியாளனாய் இருந்தே ஓய்வு பெற வேண்டியது தானா? தாங்கள் ஓய்வு பெற்றால், சில காலம் நானும் எமதர்மனாகப் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெறுவேனே !

எமன் (கோபத்தில்): ம்...! என்ன துணிச்சல் உனக்கு? இப்படிபட்ட விபரீத ஆசையெல்லாம் உனக்கெதற்கு ? இறப்போர் பட்டியலைக் கொண்டு வா ! அதிலே உனக்கும் ஒரு தேதி குறிக்கிறேன் ! ஹா...!

சி.கு: எமதர்மனே ! என்னை மன்னித்து விடுங்கள் !

எமன் : ம்...! ஹா...ஹா...! பிழைத்துப் போ ! ஆனால், இனியும் நீ சித்ரகுப்தனாக இருக்கத் தகுதியற்றவன். நான் வேறொருவனை அந்தப் பதவிக்குப் பார்த்துக் கொள்கிறேன். அந்த 'இறப்போர் பட்டியலை' என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ போய் சேர் ! ஹா..ஹா...

சி.கு: ப்ரபு...அந்த பட்டியல்....

எமன்: ம்...எங்கே அது?

சி.கு: ப்ரபு ! அந்த பட்டியல் தொலைந்து விட்டது...அதனால்தான் இரண்டு நாளாக....

எமன் (இடைமறித்து) : என்னது...? தொலைத்து விட்டாயா? சித்ரகுப்தா...என்ன காரியம் செய்தாய்?

சி.கு: மன்னிக்க வேண்டும் ப்ரபு ! அது என் கையிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டது...

எமன்: கீழே விழுந்து விட்டதா? அப்படியென்றால் அது பூலோகத்தில்தான் விழுந்திருக்கும்...புறப்படு பூலோகத்திற்கு...ம்...ஆகட்டும்...!

சி.கு: இதோ புறப்பட்டேன் ப்ரபு...! பல்லக்கில் பூலோகம் சென்று அந்த பட்டியலைத் தேடி மீட்டு வருகிறேன் !

எமன்: ம்ம்....வெற்றியுடன் வா !

------------காட்சி முடிவு----------------------------(தொடரும்...)

Friday, June 5, 2015

ஜோக்ஸ் - பாகம் - 3

நம்ம தலைவர், எதிர்க் கட்சி தலைவியை 'நேருக்கு நேர் விவாதத்துக்குத் தயாரா?' - ன்னு கேட்க நினைச்சு, தமிழ் புலமையைக் காட்டறேன்-ன்னு சிக்கல்-ல மாட்டிகிட்டாரு !

அப்படி என்ன சொன்னாரு?

"என் வாயோடு வாய் வைக்கத் தயாரா?"ன்னு பேசிட்டாராம்...

----------------இன்னிக்கு மூச்சு முட்ட பிரியாணி சாப்பிட்டேன் !

'தம்' பிரியாணி-யா?

-------------------"காகித விலை ஏறுதுன்னு, அந்த டாக்டர், புதுசா ஒரு ஆஃபர் போட்டிருக்காரு !"

"என்ன அது"

"ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி கொடுக்கணும்னா அதிக ஃபீஸ்-ஸாம். நோயாளியே, பேப்பர் எடுத்துகிட்டு வந்து எழுதிகிட்டா டிஸ்கௌன்ட்-டாம் !"

------------------------


Tuesday, June 2, 2015

தெய்வமாகலாம் !

விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பார்ப்பதற்கும்...
   இயற்கை எழில்தன்னை அகத்துள்ளே சேர்ப்பதற்கும்...
திரிந்து செல்கையிலே பாதையினை அறிவதற்கும்..
   இறைவன் நமக்களித்த சீதனமே இருவிழிகள் !

மண்ணில் கதைமுடித்து மண்ணோடு கலக்கும்முன்
   என்னே ! இன்பங்கள் கண்ணாலே அடைகின்றோம் !
கண்ணால் நாம்பெற்ற இன்பமெலாம் கண்ணற்றுக்
   கலங்கும் மற்றவர்கள் அடைந்திடவும் வேண்டாமோ?

தானம் பலவுண்டு, இருந்தாலும் நாமிங்கு...
   கண்ணுற்ற காட்சியெலாம் கண்ணற்றோர் கண்டுணர...
வானம் தனைமுட்டும் புண்ணியமும் கைகூட...
   தானம் எனஇரண்டு கண்களையும் தந்திடுவோம் !

தெய்வம் அதுதந்த விழியிரண்டை நீயிங்கே...
   தானம் எனத்தந்தால் விழிபெற்றோன் இப்புவியில்..
உய்யும் வரைஉனையே தெய்வமெனப் போற்றிடுவான் !
   ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான் !

தானம் செய்யுங்கள் ! கண்தானம் செய்யுங்கள் !
  தரணி விட்டபின்னே தெய்வம்போல் உய்யுங்கள் !
ஊனம் உள்ளோர்க்கு உளமார உதவுங்கள் !
   அவர்தம் வாழ்வினிலே வெளிச்சம் காட்டுங்கள் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates