.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, June 5, 2015

ஜோக்ஸ் - பாகம் - 3

நம்ம தலைவர், எதிர்க் கட்சி தலைவியை 'நேருக்கு நேர் விவாதத்துக்குத் தயாரா?' - ன்னு கேட்க நினைச்சு, தமிழ் புலமையைக் காட்டறேன்-ன்னு சிக்கல்-ல மாட்டிகிட்டாரு !

அப்படி என்ன சொன்னாரு?

"என் வாயோடு வாய் வைக்கத் தயாரா?"ன்னு பேசிட்டாராம்...

----------------



இன்னிக்கு மூச்சு முட்ட பிரியாணி சாப்பிட்டேன் !

'தம்' பிரியாணி-யா?

-------------------



"காகித விலை ஏறுதுன்னு, அந்த டாக்டர், புதுசா ஒரு ஆஃபர் போட்டிருக்காரு !"

"என்ன அது"

"ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி கொடுக்கணும்னா அதிக ஃபீஸ்-ஸாம். நோயாளியே, பேப்பர் எடுத்துகிட்டு வந்து எழுதிகிட்டா டிஸ்கௌன்ட்-டாம் !"

------------------------


Tuesday, June 2, 2015

தெய்வமாகலாம் !

விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பார்ப்பதற்கும்...
   இயற்கை எழில்தன்னை அகத்துள்ளே சேர்ப்பதற்கும்...
திரிந்து செல்கையிலே பாதையினை அறிவதற்கும்..
   இறைவன் நமக்களித்த சீதனமே இருவிழிகள் !

மண்ணில் கதைமுடித்து மண்ணோடு கலக்கும்முன்
   என்னே ! இன்பங்கள் கண்ணாலே அடைகின்றோம் !
கண்ணால் நாம்பெற்ற இன்பமெலாம் கண்ணற்றுக்
   கலங்கும் மற்றவர்கள் அடைந்திடவும் வேண்டாமோ?

தானம் பலவுண்டு, இருந்தாலும் நாமிங்கு...
   கண்ணுற்ற காட்சியெலாம் கண்ணற்றோர் கண்டுணர...
வானம் தனைமுட்டும் புண்ணியமும் கைகூட...
   தானம் எனஇரண்டு கண்களையும் தந்திடுவோம் !

தெய்வம் அதுதந்த விழியிரண்டை நீயிங்கே...
   தானம் எனத்தந்தால் விழிபெற்றோன் இப்புவியில்..
உய்யும் வரைஉனையே தெய்வமெனப் போற்றிடுவான் !
   ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான் !

தானம் செய்யுங்கள் ! கண்தானம் செய்யுங்கள் !
  தரணி விட்டபின்னே தெய்வம்போல் உய்யுங்கள் !
ஊனம் உள்ளோர்க்கு உளமார உதவுங்கள் !
   அவர்தம் வாழ்வினிலே வெளிச்சம் காட்டுங்கள் !

Sunday, May 31, 2015

சுமை தாங்கும் மொட்டுக்கள் !

படித்துக் களிக்கின்ற வயதில் - மகனைப்
   பள்ளி அனுப்பாம லேயே ...
கடிந்தே என்னென்ன வேலை - இங்கே
   செய்ய்ச் சொல்கின்றார் பெற்றோர் !

காலை மாலையென இன்றி - தன்
   காலில் ஏதுமணியா சிறுவர்
சாலை ஓரங்களில் கிடந்து - பிறர்
   செருப்பைத் துடைக்கின்றார் பாரீர் !

சிறிய வயிறுதனைப் பேண - இந்த‌
  சிறுவர் படுந்துன்பம் பெரிது !
பெரிய உணவகங்கள் தன்னில் - எச்சில்
   தட்டுகள் அகற்றிடுவார் பாரீர் !

ஓடித் திரிகின்ற பருவம் ! - அதிலே
   ஓய்வே இல்லாமல் தினமும்...
பீடித், தீப்பெட்டித் தொழிலில் - பல‌
   பாடு படுகின்றார் பாரீர் !

எட்டு வயதாக வில்லை ! - உலகம்
   ஏதும் அறியாத பிள்ளை !
மொட்டு மலராத முல்லை - மேலே
   பெரிதாய் சுமத்தலாமோ கல்லை?

நெஞ்சு துடிக்கின்ற தய்யா ! - இவர்
   நிலைமை நினைக்கின்ற போதே !
பிஞ்சு உடம்பெல்லாம் இனியும் - இப்
   பாடு படும்நிலையை ஒழிப்போம் !

பெருமை சேர்த்திடும்நல் கல்வி ! - அதைப்
   பெரிதாய் அவர்கட்குத் தருவோம் !
அருமை செல்வங்கள் சிறுவர் - இதை
   அகத்தோடு நிறுத்தி செயல்படுவோம் !

Saturday, May 16, 2015

கவிஞன் !

உள்ளத்தில் ஊறிவரும் உணர்ச்சிகட்கு...
   உயிரோட்டம் தருபவனே கவிஞன் !
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களை...
     பார்வையுறச் செய்பவனே கவிஞன் !

சிந்தனையாம் பெண்ணவளைக் கைப்பிடிப்பான் !
    சீறிஎழும் புரட்சிமகள் ஈன்றெடுப்பான் !
நிந்தனைக்கு ஒருநாளும் அஞ்சமாட்டான் !
   நித்தநித்தம் கனவுலகில் சஞ்சரிப்பான் !

இறகடித்து இன்பமுற கற்பனையாம்
     எழில்வானில் சஞ்சரித்து இறங்கிவந்து...
சிறக்குமொரு கவிப்பெண்ணை பெற்றெடுப்பான்...
    சீரோடு சமுதாயம் செழிக்கவென்றே !

Thursday, April 23, 2015

ஜோக்கு - பாகம் - 2

"எங்க ஹோட்டல் மாஸ்டரா இருக்குற ஆளு பேரு கோபி !"

"அவரோட ஸ்பஷாலிட்டி ஆலு கோபி-ன்னு சொல்லுங்க !"

"!!!"





"பல்வேறு காரணம் சொல்லி ஆபிசுக்கு 3 நாள் லீவு போட்டீங்கலாமே ! என்ன ஆச்சு?"

"'ரூட் கனால்' (பல் வேரு) ஆபிரேஷனுக்குத் தான் !"


_______________________________________________________________ 


"அந்த ஏகாம்பரம் வாக்கு தவறமாட்டார்ன்னு சொன்னீங்க...ஆனா, அவரு ஏமாத்தற ஆளு போலிருக்கே !"

"தினமும் காலைல தவறாம Walk போகிறவர்ன்னு சொன்னேன் ...நீங்க வேற...!"


"???"
________________________________________________________________



"பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்த ராஜஸ்தான்காரர் கிட்ட அவர் மனைவி எப்போதும் சண்டை போடறாங்க !"

"அவங்க மனைவி பெங்களூரா?"

"எப்படி சார் கரெக்டா சொன்னீங்க?"

"இவரு ராஜஸ்தான் ராயல்ஸ் - ன்னா, அவங்க ராயல் சேலஞ்சர்ஸ் ஆச்சே !"

Saturday, March 21, 2015

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது !

"அப்படி இருந்த நானா, இப்படி ஆயிட்டேன் !" - நினைவலைகளிலிருந்து மீண்ட அழகேசன், தன்னைப் பற்றி, தானே ஆச்சர்யப் பட்டுக்கொண்டான். அவன் நினைவலைகளில் தவழ்ந்த நினைவுகள் என்னென்ன?

பிறந்தது கிராமத்தில் என்றாலும், விவரம் தெரிந்த வயதிலிருந்து, அவன் படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பள்ளிக்கூட நண்பர்களுடன், வெறித்தனமாக ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தான். நாளடைவில், ஹாலிவுட் சென்று, தன் அபிமான நட்சத்திரங்களை சந்திக்க வேண்டும் என்பதே அவனது வாழ்வின் குறிக்கோள் ஆனது. பருவ வயதில், ஹாலிவுட் நடிகைகளின் அழகில் மயங்கி, ஹாலிவுட் சென்றுதான், தன் வருங்காலத் துணையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவும் எடுத்தான்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மேல்படிப்பு என்னும் சாக்கில், அமெரிக்கா பயணமானான். அழகேசனின் தாய்க்கு அவனை அனுப்புவதற்கு மனமே இல்லாமல் இருந்தாள். படிக்கும் காலத்தில் தன்னுடன் கிராமத்தில் கழிக்காமல் போனவன், படித்து முடித்தவுடன், தன்னுடைய வயதான காலத்தில் தன்னுடன் வந்து இருப்பான் என்று எண்ணியிருந்தாள். தன்னுடைய 'அழகு', தன்னை விட்டு நீண்ட தூரம் சென்றதிலிருந்து அவள் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமானது.

அழகு, அமெரிக்கா சென்று, வேலையும் தேடிக்கொண்டான். தன் பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசி மூலம் பேசி வந்து கொண்டிருந்தான்.

"அழகு ! எப்படிப்பா இருக்க?"

"நல்லாத்தாம்மா இருக்கேன். "

"அம்மாக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்குப்பா...ஒரு வாரம் லீவுல வந்துட்டுப் போயேன்..."

"அம்மா...லீவெல்லாம் கிடையாதும்மா...இங்க இருந்து எல்லா வசதியும் அனுபவிச்ச பிறகு அந்த கிராமத்தில வந்து என்னால் எல்லாம் இருக்க முடியாதும்மா !"

அழகேசனின் தாய்க்கு குரல் தழுதழுக்க "சரிப்பா..உடம்ப பாத்துக்க.." என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். அடுத்த நாள் அழகேசனுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது !  மறுமுனையில், அழகேசனின் தந்தை பேசினார்..."டேய் ! அழகு...உங்க அம்மா உடம்பு முடியாம இருக்காங்கடா...நீ வந்து ஒரு தடவ பாத்துட்டு போயிடுடா !"...

அழகேசன் திரும்பி வந்து அவனை பார்த்ததிலிருந்து, அவனது தாய்க்குத் தெம்பு பிறந்தது. மருத்துவர்களால் தர முடியாத மனத்தெம்பினை, மகனால் தரமுடியும் என்று தாய்க்குத் தெரியாதா?

"நீதான்...நல்லா ஆயிட்டயே அம்மா ! நான் கெளம்பறேன்...! நீங்களும் என்னோட வந்துடுங்க...அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சுட்டுப் போறேன்.." என்றான் அழகு...

"ரெண்டு நாள்ல பொங்கல் வருதுடா அழகு...பண்டிகைக்கு இருந்துட்டுப் போடா..." - அம்மா சொல்கிறாளே என்பதைவிட, தான் அவசரப்பட்டு சென்றுவிட்டால், மீண்டும் தொலைபேசி அழைப்பு வருமோ திரும்ப வரச்சொல்லி" என்ற நினைப்பில், பொங்கல் கழித்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தான்.

"பொங்கலோ பொங்கல்" என்று இல்லங்கள் தோறும் எழுந்த கோஷங்கள் பொங்கல் வந்துவிட்டதை அறிவித்தன. சூரிய பூஜைக்கு வெளியே வந்த அழகேசன் கண்களில், அவன் இதுவரை காணாத அழகு கண்ணில் பட்டது - எதிர் வீட்டில்..."அடடா...என் தேவதை" என பிண்ணணியில் ஒலித்தது போல் இருந்தது. பாவாடை, தாவணியில் இருந்த அந்த பெண், பாரம்பரியமான முறையில் பொங்கல் கொண்டாடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவனுக்கேப் புதிய அனுபவமாக இருந்தது.

அன்றைய தினம் அஸ்தமனம் ஆவதற்குள், அந்தப் பெண்ணை பற்றிய விவரங்கள் அவனிடம் சேர்ந்தன். பெயர், மகேஸ்வரி - சென்னையில் இருப்பவள் - பொங்கல் மற்றும் தீபாவளிப் பண்டிகைக்குக் கண்டிப்பாக கிராமத்திற்கு வந்து குடும்பத்துடன் தான் கொண்டாடுவாள். திரையில் காணும் ஒப்பனை செய்த ஹாலிவுட் நடிகைகளை விட, இவள் இயல்பாகவே அழகாக இருந்த்து, அழகேசனுக்கு அதிசயமாய் இருந்தது. 'ஐபேட்' - டில் பாட்டுக் கேட்டுக் கொண்டு, வாசற்பக்கம் அமர்ந்திருந்தவன், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலுக்கு தயார் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி கண்ணில் பட்டாள். மாட்டு கொம்புக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தாள். இவனது நெஞ்சிலே வானவில் வண்ணமிட்டது !

பொங்கல் தினங்கள் முடிந்தது. மகேஸ்வரியின் அழகு அவனை பாடாய் படுத்தியது. அவளுடன் பேசி, பழக்கப்பட்டும் கொண்டான். அழகேசனின் அம்மாவுக்கு, ஏற்கனவே மகேஸ்வரியை மிகவும் பிடிக்கும். அவள் மீது, தன் மகனுக்கு வந்த ஈர்ப்பினை அவள் ரசித்தாள். மகேஸ்வரி - அழகேசன் திருமணம் நடந்து இன்று  2 வருடம் ஆகிவிட்டது.

"இந்தாங்க காபி..." - என எதிரில் மனைவியாய் நின்ற மகேஸ்வரி, அவனது நினைவலைகளைக் களைத்தாள் !

* * * * * * * * * * * * * *

Friday, March 13, 2015

ரூபனின் தைப் பொங்கல் சிறுகதைப் போட்டி - 2015-ல் பரிசு !

தமிழ் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர் ரூபன் அவர்கள் குழுவுடன் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டியில், எனது சிறுகதை ஆறுதல் பரிசை வென்றுள்ளது.

சிறுகதையைப் படிக்க...

http://psdprasad-tamil.blogspot.com/2015/03/lifechangingfestival.html


வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்...!போட்டி முடிவுகளுக்கான ரூபனின் பதிவு கீழே !

http://www.trtamilkkavithaikal.com/2015/03/2015.html

Story Contest Winner

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates