.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, January 3, 2014

இணையத்தின் சமூகப் பயன்பாடு

ரூபன் / பாண்டியன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை !
போட்டி முடிவுகளைக் காண:
http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html  


நுழைநயில்

"கணைய நோயென்றாலும், காதல், கண்ணராவி என்றாலும்
இணையத்தில் தேடித்தான் விடைஅறிகுவோம்
" - என்ற காலகட்டத்தில், நாம் வாழ்கிறோம். நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இன்றைய சமூதாயம் முழுவதும், இணைய வலைப் பரவி பிண்ணியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தூரங்களையும், நாட்டு எல்லைகளையும் தாண்டி, உடனக்குடன் தகவல்களைப் பறிமாற்றம் செய்து கொள்ள நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் பல கோடி மக்கள் இணையத்தில் இணைகிறார்கள். அதே நேரத்தில்,   ஆபாச படங்கள்,  வலைத் திருடர்கள் போன்றவை காரணமாக  சைத்தான்களின் ஆயுதமாகவும், வில்லனாகவும் இணையம் கருதப்படுகிறது.

2001-ம் ஆண்டு, ப்ரான்ஸ் நாட்டின் 'அழகியாக வெற்றி பெற்றவர் ஒரு ஆண்'  என்ற தவறான செய்தி இணையத்தில் வெளியாகி வெற்றியாளரைத் திடுக்கிட வைத்தது. அப்போது, நடுவர் குழுவினர் இணையத்தை "கட்டுப்பாடுகள் இல்லாத சாதனம்" என்றும், வதந்திகளைப் பரப்புவோர், குற்றவாளிகள், குழந்தைகளிடம் காமம் கொணர்வோர் போன்றோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குற்றம் சாட்டினர்.

இத்தகைய இணையம், சமூக வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், அந்தத் தாக்கத்தின் இயல்பிலும், அளவிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அறிஞர்களும், ஆய்வர்களும் இணையத்தின் மூலமாக நடைபெறும் கருத்து பரிமாற்றங்கள், நேருக்கு நேர் சந்தித்து பேசுதற்கு ஒப்பாகாது என்றும், மாறாக அது "தனிமை", "மன உளைச்ச"லுக்கு ஆளாக்குகிறது என்றும் கூறியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க, மறு புறத்தில் "இணையம் புதிதானக் கருத்து பரிமாற்ற சாதனமா"க உருவெடுத்துள்ளதாகவும், புதிய உறவுகளை அது உருவாக்குவதாகவும் கருதுபவர்களும் உள்ளனர்.

கொஞ்சம் வரலாறு

நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதே, வேகமான கருத்துப் பறிமாற்றத்திற்கான வழியாக இருந்த காலத்தில், 'தந்தி' வழித் தொடர்பு - சில நிமிடங்களில் தகவலைத் தெரிவிக்கலாம் - என்பது மிகப் பெரும் விஷயமாகக் கருதப்ப்ட்டது.  தாமஸ் ஆல்வா எடிசன் கூடத் தன் மனைவிக்குத் தந்தி மூலமாகத் தான் முன்மொழிந்தாராம் ! பின்பு, தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் உடனுக்குடன் பேச முடிந்தது. ஒரே நேரத்தில் பல கோடி மக்களிடம் செய்திகளைச் சேர்த்திட "வானொலி"யும், அதன் பின் வந்த தொலைக்காட்சிக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால் இணையம் மட்டுமே, மற்ற கண்டுபிடிப்புகளிலுள்ள எல்லாப் பயன்பாடுகளையும் ஒன்றடக்கியதாக உருவெடுத்தது. அதே நேரத்தில், மற்ற கண்டுபிடிப்புகளிலிருந்து இணையத்தை வேறு படுத்தும் முக்கிய காரணி "பெயரில்லாமல்", தன் அடையாளம் காட்டாமல் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்னும் வசதி. இதனால் ஏற்படும் சமுதாய தாக்கங்களைப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

சமூகப் பயன்கள்

இணையத்தின் சமூகப் பயன்பாடுகளை இரண்டு பிரிவுகளின் கீழ் பிரிக்கலாம்

1. தனி மனிதர்களுக்கான பயன்பாடு
2. அலுவலகங்களுக்கான பயன்பாடு


தனி மனிதர்களுக்கான பயன்பாடு

தனி மனித கருத்து பறிமாற்றத்தில் இணையத்தின் முக்கிய பயன்பாடு - 'ஈ மெயில்' எனப்படும் 'மின்னஞ்சல்'. நலம் விசாரிப்பது தொடங்கி, புகைப்படங்கள் அனுப்புதல், வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தல் என வெவ்வேறு வழிகளில் இணையம் பயன்படுகிறது.

மின்னஞ்சல் தவிர, மக்கள் தன் கருத்துக்களை பதிவு செய்யவும், எழுத்துக்களால் குரல் எழுப்பவும் நல்லதொரு சாதனமாக இணையம் அமைந்துள்ளது. கதை, கட்டுரை, கவிதை எழுதும் திறன் கொண்டோர்க்கும், புகைப்படக் கலையில் தேர்ந்தோர், ஒளிப்பதிவு செய்வோர்க்கும் மேடை அமைத்துக் கொடுக்கிறது.

சமீப காலங்களாக புகழ்பெற்றிருக்கும் சமூக வலைத் தளங்கள் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக உள்ளன.

அயல் நாட்டுக்கு பேசும் தொலைபேசி கட்டண செலவுகளைக் குறைக்க, இணையம் மூலமான வாய்மொழிச் சேவைகள் மிகவும் உதவுகின்றன. இத்தகைய சேவைகள் தொலைபேசியையும் தாண்டி, முகம் பார்த்து பேசக் கூடிய வசதியும் தருகின்றன.

சமீப காலமாக இணையப் பயன்பாட்டில் வேகமாக அதிகரித்து வருவது - வணிகம் - வீட்டிலிருந்த படியே பொருட்களை வாங்கவும், விற்கவும் செய்வதற்கான வசதியாகும்.  2013-ம் ஆண்டில் 1.2 ட்ரில்லியன் டாலருக்கான விற்பனைகள் நடக்கும் என்று கணிக்கப்பட்டது.( நன்றி: http://www.statista.com/ )அலுவலகங்களுக்கான பயன்பாடு

நிறுவனங்களுக்கு, இணைய தளங்கள் அதன் முகமாகத் திகழ்கின்றன. இன்றைய நிலையில் இணைய தளம் இல்லாத நிறுவனமே இல்லை என்ற நிலை ஏறக்குறைய வந்துவிட்டது. இணையம், நிறுவனங்களுக்கு மிகப்பெரும் வியாபார விருத்தி சாதனமாகத் திகழ்கிறது. சமூக வலைத் தளங்களையும் சிறப்பான முறையில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. மின்னஞ்சல், அலுவலகம் / நிறுவனங்களில் அடிப்படைத் தேவையாகிவிட்டது. உலகெங்கும் விரிந்திருக்கும் ஒரே நிறுவனத்தின் பல கிளைகளை இணைக்கவும், தொடர்பு கொள்ளவும் இணையம் மிகப்பெரும் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. பொருட்களையும், சேவைகளையும் விற்கவும், நிறுவனங்கள் இணையத்தில் இறங்கியுள்ளன.

மற்ற பயன்பாடுகள்

தனி மனித மற்றும் நிறுவனங்களுக்கான பயன்பாடு தவிர மற்ற பயன்பாடுகளை, கீழ்காணும் தலைப்புகளில் வகைப்படுத்தலாம்.

1. புதிய உறவுகள் அமைதல்
2. இணைய குழுக்கள்
3. இதர பயன்பாடுகள்

புதிய உறவுகள் அமைதல்

"நாங்கள் முதன் முதலில் இணையத்தில்தான் சந்தித்தோம்" என்ற சொல்லும் உறவுகள், இனறைய காலகட்டத்தில் பரவலாகக் காணமுடிகிறது. 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்கள், திருமணம் தொடர்பான தளங்கள், அரட்டை அறைகள் போன்றவை முகமே பார்க்காதவரின் அறிமுகங்களைக் கொடுக்கிறது. இதனைத் தவறாகப் பயன்படுத்துவோர் இருக்கிறார்கள் என்றாலும்,  இது மிகப்பெரும் புரட்சியை உருவாக்கியிருக்கிறது. 'அரசனும் ஆண்டியும் இங்கு ஒன்றுதான்' என்னும் சமத்துவக் கொள்கையும் இணையத்தில் இணைந்துள்ளது.


இணைய குழுக்கள்

தகவல் பறிமாற்றத்துக்கான புதுமையான முறையாக 'இணையக் குழுக்கள்' உள்ளன. சமையற் குறிப்புகள் முதல் டைனாசிர், ராக்கெட் செலுத்துதல் வரை எல்லாத் தலப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான குழுக்கள், கருத்துக்களை பகிர உதவுகின்றன. ஒரே விதமான விருப்பங்கள் கொண்டோர்க்கு, எல்லைகள் தாண்டி, உலகெங்கும் சந்தித்துப் பேச இக்குழுக்கள் பெரிதும் உதவுகின்றன.

அரசியல், இயல், இசை, நாடகம் எனப் பல்வேறு துறையினர்க்கும் இணைய குழுக்கள் எளிய சாதனாமாகத் திகழ்கிறது. அறிவியல், கலைத் துறையினருக்கு சந்தேகங்களைத் தீர்க்கும் தகவல் களஞ்சியங்களாகவும் இணையம் உள்ளது.

இதர பயன்பாடுகள்

இந்தக் கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தித் திறமைகளை அடையாளம் காட்டவும், மொழியினை வளர்க்கவும் இணையம் உதவுகிறது. 'யூ ட்யூப்' தளத்தின் மூலமாகவே மதுரையில் இருந்த வில்பர் சற்குணராஜ் உலகெங்கும் புகழ் பெற்றார். புகைப்படங்கள் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டோர்க்கும், பொழுதுபோக்கிற்காக விரும்பி செய்வோரும் இணையம் மூலம் பகிர்ந்து பயன்பெறுகின்றனர்.

இணையத்தின் ஆதிக்கத்திற்கு முன்பாக எந்தத் தலைப்பிலும்  'ஆராய்ச்சி'  செய்வோர்கள், அங்குமிங்கும் அலைந்து பலரை சந்தித்து, புத்தகங்களைத் துழாவித் தகவல்களைச் சேகரித்து வந்தனர். இந்நாட்களில், இணையம் மூலமாக ஆராட்சிகள் செய்வோர்க்கு உட்கார்ந்த இடத்திலேயே பெரும்பாலான தகவல்கள் திரட்ட முடிகிறது.

'கல்வி'த் துறையில் இணையத்தின் பயன்பாடு பாராட்டுக்குரியதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் இணையும் இடமாக இணையம் செயல்படுகிறது. கல்வி நிறுவனங்களும் சுற்றரிக்கைகள் முதல் வீட்டுப் பாடங்கள் வரை எல்லாத் தகவல் பறிமாற்றங்களையும் இணையம் மூலமாகச் செய்கின்றன. பெற்றோர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு இது உதவுகிறது,

பண பறிவர்த்தனைகள் செய்வதற்கும் இணையம் பெரிய அளவில் உதவுகிறது. வங்கிகளில் பணம் இடவும், எடுக்கவும் பெரிய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை மாறிவிட்டது. இணையம் மூலமான வங்கி சேவை மூலம் வீட்டிலிருந்தே பண பரிவர்த்தனைகள் செய்யமுடிகின்றது.

பயணம் செய்வோர்க்கு, செல்லுமிடம் பற்றிய விளக்கங்களையும், வரைபடங்களையும் தந்து அமைதியான பயணத்திற்கு வழி காட்டுகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் இணையத்தின் பயன்பாடு முக்கியமானதாகும். உலக நிகழ்வுகள், பங்கு சந்தை நிலவரங்கள், விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு என பல துறைகளில் உடனுக்குடன் செய்திகள் பரிமாற முடிகின்றது.

அனைத்தையும் தாண்டி, இணையம் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனாமாகவும் திகழ்கிறது. விளையாட்டுகள், புதிர்போட்டிகள், பாடல்கள், நடனங்கள் போன்றவை இணையமெங்கும் பரவி பொழுதுபோக்கு அம்சங்களை வாரி வழங்குகிறது.

முடிவுரை

இவ்வாறாகத் தன் பல்வேறு பயன்பாடுகளால், இணையம் நமது சமூகத்தில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொணர்ந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில், தவறான முறைகளில் பயன்படுத்தி பணம் பறிப்போர்க்கும், மானம் அழிப்போர்க்கும் இணையம் பயன்படுகிறது. இது, இணையத்தின் தவறல்ல. 'கனியிருக்கக் காய்கவரும்' குணம் கொண்டோரை என்ன செய்வது? 'பகிர்தல்' என்றப் பண்பாட்டையே இணையம் தான் உயிர்ப்பித்திருக்கிறது என்று சொல்லலாம். இதுவே இணையத்தின் மாபெரும் சாதனையாகக் கருதலாம். எத்தனையோ வழிகளில் நவயுக வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகி, இன்னும் கண்டுபிடிக்கப் படாத பல பயன்பாடுகளைத் தன்னுள்ளடக்கி 'இணைய வலை' விரிந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
18 comments:

 1. வணக்கம்
  போட்டிக்குரிய தங்களின் கட்டுரை வந்து கிடைத்து விட்டது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது. தற்போது நடுவர்களின் பரீசீலனையில் உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன். போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.பிரசாத்(அண்ணா)

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்-2014

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன் ! வழக்கம்போல் ஊக்கம் தேவை என்றால் ரூபனுடன் உரையாட வேண்டும் ! என்றுதான் தோன்றுகிறது !

   Delete
 2. சகோதரருக்கு வணக்கம்
  போட்டிக்கான தங்களது கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள். தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றிகள். தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ! மிக்க மகிழ்ச்சி ! தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !

   Delete
 3. விரிவான கட்டுரை அருமை
  பகிர்வுக்கும் வெற்றிபெறவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 4. ஒவ்வொரு தலைப்பிற்கேற்ப விளக்கம் அருமை... நடுவர்களுக்கு பதிவின் இணைப்பை அனுப்புகிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் !

   Delete
 6. மதிப்பிற்குரிய திரு பி.எஸ்.டி.பிரசாத் அவர்களுக்கு வணக்கம்.
  தங்கள் கட்டுரைக்கான வலை இணைப்பு திரு தனபாலன் அவர்களின் வழியே கிடைத்தது, படித்தேன். தொடர்ந்து சிறப்பாக எழுத என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. திரு முத்துநிலவன் ஐயா அவர்க்ளுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 7. வணக்கம்

  குறிப்பு-
  நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  -----------------------------------------------------------------------------------------------------------

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரர்
  ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ! முடிவுகளுக்கான தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன் ! இங்கேயே வந்து பின்னூட்டத்தில் செய்தியைப் பகிர்ந்ததற்கு நன்றி ! இது போன்ற போட்டியின் மூலம் நிறைய புதிய கருத்துக்களையும், சிந்தனைகளையும் காண முடிகிறது ! வாழ்க உங்கள் பணி !

   Delete
 9. வணக்கம்.
  ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
  தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..
  http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

  சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
  மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
  சந்திப்போம்.....
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ! மின்னஞ்சல் செய்கிறேன்...தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !

   Delete
 10. கத்தியையும் புத்தியையும் மட்டுமல்ல எதையும் ஆக்கத்திற்கு மட்டுமே பாவித்தால் நலமே! அழிக்கவும் அழிவுப் பாதையை நோக்கி செல்பவர்களையும் என்ன செய்வது.எல்லா விடயங்களையும் அருமையாக சேகரித்து முத்தாக எழுதியுள்ளீர்கள். நன்றி!
  வெற்றி பெற்றமைக்கும் மேலும் வெற்றி பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

   Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates