.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, June 21, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்


முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com


காட்சி - 6                               இடம்: ஒரு சாலை

சி.கு:(தனக்குள்)  ஷ்...! பரந்து கிடக்கும் இந்த் பூலோகத்தில் எங்கென்று தேடுவது? பூமிக்கு வந்ததும் என் தேவ லோக சக்திகள் எல்லாம் நினைவில் வர மாட்டேன் என்கிறது ! எமதர்மனிடம் உதவி கேட்க வேண்டியதுதான்...

பிரபு ! நான் தான் சித்ரகுப்தன் பேசுகிறேன்... அந்தப் பட்டியலைத் தேடித் தேடி அலுத்துவிட்டேன்...நான் மீண்டும் உங்களிடமே வந்து விடுகிறேனே !

எமன்: இங்கே வருகிறாயா? ஹா...ஹா...அப்போது பட்டியல்?

சி.கு: பட்டியல்...பட்டியல்...பிரபு ! உங்களைக் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை ! அந்த பட்டியல் போனால் என்ன? வேறு ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வோமே !

எமன்: சித்ரகுப்தா ! உன் இஷ்டத்திற்கு புது பட்டியல் எல்லாம் செய்ய முடியாது. தொலைந்து போனதைத் தேடி எடுத்து வா ! உனக்கு நான் இங்கிருந்தே உதவுகிறேன் !

சி.கு: உதவி செய்யுங்கள் பிரபு ! உதவி !

எமன்: ஹா...ஹா...! என் சக்தியை பயன்படுத்திப் பார்த்ததில், அந்த பட்டியல் நீ இருக்கும் ஊரில்தான் ஒருவனிடம் இருக்கிறது. அவனிடம் ஒரு நவீன சாதனமும் உள்ளது...பட்டியலுடன், அவனையும் நம் உலகத்துக்கு அழைத்து வா ! ஹா....ஹா...!

சி.கு: உதவிக்கு நன்றி பிரபு ! என் பதவி...?!

எமன்: சித்ரகுப்தா ! நீ வரும் வரை அந்த பதவி உனக்குத் தான்...கவலைப்படாதே !

சி.கு: நான் வந்த பிறகு...?

எமன்: அதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் !

சி.கு: நன்றி...ராஜனே ! நன்றி...!

(மீண்டும் தேடுதல் தொடர்கிறது....)

--------------காட்சி முடிவு--------------------

காட்சி - 7                இடம்: தேவதாஸ் (கணிணி மாமா) வீடு

பாபு: கம்ப்யூட்டர் மாமா ! கம்ப்யூட்டர் மாமா !  நீங்க இன்னும் கிளம்பலயா?

தேவ்: ஷ்...! சத்தம் போடாதே ! எங்க அப்பா சரியான 'மூட்'-ல இல்ல...ரொம்ப கோபமா இருக்காரு...அந்த ரூம்-லேர்ந்து என்ன சொல்றார் கேளு...!

அப்பா: சரியான உதவாக்கர ! எப்ப பாரு...அந்த கம்ப்யூட்டரைக் கட்டிகிட்டு உட்கார்ந்திருக்கான் ! டேய் ! என் வாயாலயே சொல்லக்கூடாது...இருந்தாலும் சொல்றேன் ! ரொம்ப பெரிய்ய படிப்பு படிச்சு புட்டதா நெனச்சு, "பெரிய பதவி என்னைத் தானா தேடி வரும்"-ன்னு சொல்லிகிட்டு இருக்கியே...உனக்கு எமலோகப் பதவி கிடைக்கிற வரைக்கும், இந்த பூலோகத்தில ஒரு பதவியும் கிடைக்காது...!

தேவ்: பாபு ! கேட்டியா ! அன்னிக்கு என்னடா-ன்னா "இந்த ஜென்மத்துல உனக்கு வேலை கிடைக்காது-ன்னாரு...இன்னிக்கு...இப்படி...

பாபு: சரி மாமா ! நான் போயிட்டு அப்புறமா வர்றேன்...!

தேவ்: பாபு..இருடா ! அந்த க்ரீடம் வெச்ச ஆள 'பூத்'-ல பார்த்தேன்-னு சொன்னியே ! அவனை இன்னிக்குத் தேடி கண்டுபிடிச்சே ஆகணும்...

பாபு: கவலைப்படாதீங்க ! அவன நான் அடையாளம் காட்டறேன் !

தேவ்: வா...! வா...! என்னோட...இப்படியே இந்த பக்கமா வீட்டை விட்டு வெளியே போயிடலாம்...அப்பாக்குத் தெரியாது...!

(இருவரும் வெளியே செல்கிறார்கள் - சாலை ஒன்றில்...)

தேவ்: அப்பாவுக்குத் தெரியாம இவ்ளோ தூரம் வந்தாச்சு ! அந்தக் க்ரீட மண்டையனை இன்னும் கண்டுபிடிக்க முடியலையே !

பாபு: அதோ பாருங்க அங்கிள் ! அந்த ஆளுதான்...

தேவ்: ம்...அவனா ! ஆமாம்...தலையில க்ரீடம்...ராஜா மாதிரி வேஷம்... சரி வா ! கிட்ட போய் கேட்போம் !
(அவனருகில் சென்று) ஹலோ ! என்ன தேடறீங்க...நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்...!

தேடுபவன்: அது வந்து...ஒரு பேப்பர்..

தேவ்: காகிதமா...என்ன அது..? ஏதாவது லிஸ்டா?

தேடுபவன்: ஆமாம்...ஆமாம்...உனக்கு எப்படி தெரியும்?

தேவ்: அந்த லிஸ்ட்-ல என்ன எழுதியிருக்கு-ன்னு சொல்லட்டா?  டேய் ! உண்மைய சொல்லு ! 10:15-க்கு சாவு...10:16 க்கு சாவு-ன்னு அந்த லிஸ்ட்-ல் எழுதி வெச்சிருக்கியே...நீ யாரு...உண்மைய சொல்லலைனா போலிஸ்-க்குப் போவேன்...

தேடுபவன்: ஐயயோ ! போலிஸ்-க்கு எல்லாம் போயிடாதீங்க...! நான் ஒரு நடிகன்...!

தேவ்: அதான் நல்லா நடிக்கிறயே !

தேடுபவன்: தம்பி ! எனக்கு உண்மையிலயே ஒண்ணும் தெரியாது....'சுமங்கலி நாடக சபா' நடத்துற நாடகத்தில சித்ரகுப்தன் வேஷத்தில நடிக்கிறேன்...அதான் இந்த மேக்-அப் !

தேவ்: அப்ப...நீங்க தேடின அந்த பேப்பர்?

தேடுபவன்: நாடகத்துல பேச வேண்டிய டயலாக் ஸ்க்ரிப்ட்...வசனத்தை மனப்பாடம் செய்யறதுக்கு எடுத்துகிட்டு வந்தேன்...எங்கேயோ பறக்க விட்டேன் போல...!

தேவ்: டேய் பாபு ! என்னடா இது...!

பாபு: அப்படீன்னா..இந்த ஆளு இல்ல போலிருக்கு மாமா !

தேவ்: கிழிஞ்சுது போ...! இதான் சின்னப் பசங்கள எல்லாம் நம்பி ஒரு காரியமும் செய்யக்கூடாது....அப்ப..சாரி-ங்க...உங்க டயலாக் ஸ்கிரிப்ட் பத்தி எங்களுக்குத் தெரியாது...சாரி...நாங்க வ்ர்றோம்...!

தேடுபவன்: போலிஸ்...! போலிஸ்...! என்னை அடிக்கிறாங்க...!

தேவ்: டேய் பாபு...ஓடுடா...! இவன் நம்மள மாட்டிவிட்டுடுவான் போல...

(ஓடுகிறார்கள்)

----காட்சி முடிவு.....

Saturday, June 20, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com


காட்சி - 3                                           இடம்: பாபு வீட்டு டெலிஃபோன் பூத்

சி.கு: (தனக்குள்) அப்பாடா ! பூலோகம் வந்தாகிவிட்டது !...(சலிப்புடன்) ம்...! பூலோகம் வந்தாலென்ன...! மனமெல்லாம் அந்த எமலோகத்திலேயே இருக்கிறது ! ஒருவேளை, எதற்கும் அஞ்சா எமதர்மன், வேறு யாரையேனும் என் பதவியில் அமர்த்தியிருப்பானோ?! சந்தேகமாகத்தான் இருக்கிறது...! என்ன செய்வது? ம்...அதோ ! ஒரு தொலைபேசியகம்...! அங்கிருந்து எமனிடம் தொடர்பு கொள்வோம் !

('பூத்'-தில்)

தம்பி ! கொஞ்சம் எமலோகத்திற்குப் பேச வேண்டும் !

பாபு: என்னது? எமலோகத்திற்கா? 'கோட் நம்பர்' தெரியுமா?
சி.கு: ஓ ! தெரியுமே ! நான் பேசிக் கொள்கிறேன் ! (டயல் செய்கிறான்)
எமதர்ம ராஜனே ! நான் பூலோகத்திலிருந்து சித்ரகுப்தன் பேசுகிறேன் ! விரைவில் தொலைந்து போன பட்டியலைக் கண்டுபிடித்து வருகிறேன். அதற்குள் அவசரப்பட்டு....(தயக்கம்)

எமன்: (கோபத்தில்) என்ன அவசரப்பட்டு...?

சி.கு: எனக்கு பதிலாக வேறொருவரை நியமித்து விடாதீர்கள் !

எமன்: நீ திரும்பி வரும் வரை அது போல் எதுவும் செய்ய மாட்டேன் ! கவலைப் படாதே !

சி.கு: நன்றி ராஜனே ! (போனை வைத்து விட்டு...) அப்பா ! ஒரு கவலை தீர்ந்தது ! இனி தேட வேண்டியதுதான்...! தம்பி...! தம்பி ! இவன் எங்கே சென்றான்...? சரி...சரி...நம் வேலையைப் பார்ப்போம்...! (நகர்கிறான்)

(கணிணி மாமா வீட்டில் பாபா - பரபரப்புடன் ஓடி சென்று)

பாபு: மாமா ! மாமா ! யாரோ ஒரு ஆளு ! பைத்தியம் போலிருக்கு ! என்னவோ பெரிய ராஜாவாட்டம் க்ரீடமெல்லாம் வெச்சுகிட்டு வந்து, எமலோகத்துக்கு போன் போடறேன்-னு சொல்றான்...! சீக்கிரம் வாங்களேன் !

(இருவரும் 'பூத்'-துக்கு வந்து பார்க்கிறார்கள். அங்கு யாரும் இல்லை)

மாமா: என்னடா ! இங்க ஒருத்தரையும் காணும் ! ஏதாச்சும் கனவு கண்டயா?

பாபு: இல்ல மாமா ! நெசமா பாத்தேன்...இங்க தான் !

மாமா: சரி ! சரி ! காசு கொடுக்காம போன் பேச இது ஒரு ஐடியா போலிருக்கு...எனக்கு வேலை இருக்கு...நான் வர்றேன்...

பாபு: சரி மாமா !

----------------காட்சி முடிவு -------------------

காட்சி - 4                               இடம்: தேவதாஸ் வீடு

அப்பா: டேய் ! தேவதாஸ் ! தேவதாஸ் ! (தனக்குள்) ஓஹோ ! தேவதாஸ்-ன்னு சொன்னா இவருக்குப் பிடிக்காதே ! (உரக்க) என் கம்ப்யூட்டர் மவனே !

தேவ்: என்னப்பா?

அப்பா: நான் கொஞ்சம் மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வர்ரேன் ! வீட்டைப் பாத்துக்கோ !

தேவ்: சரிப்பா !

(அப்பா வீட்டை விட்டு வெளியில் வந்து நடக்கிறார்)

அப்பா: (தனக்குள்) என்னது ! காலையிலேயே இந்த வெயில் அடிக்குது ! ஊப்ஸ்...மார்க்கெட்-டுக்கு வேற இன்னும் அரை மைல் நடக்கணும்...! ம்...யாரது ? தேவ லோக ஆளு மாதிரி வேஷம் போட்டுகிட்டு ரோட்-டுல அலையறான் ! ம்...ஏதோ தேடற மாதிரி இருக்கு ! என்னதான் தேடறான்...! போயி விசாரிப்போம் !

(தேடுபவரிடம்) ஹலோ ! என்ன தேடறீங்க?

சி.கு: ம்...அது ஒன்றுமில்லை ! ஒரு பட்டியிலிட்ட காகிதம் !

அப்பா: (சிரித்தவாறு) ஹா...ஹா...! வீட்டுல பொண்டாட்டி எழுதி கொடுத்த லிஸ்டை தொலைச்சுட்டீங்களா? நல்லாத் தேடுங்க...! ஹா..ஹா ! (சிரித்துக் கொண்டே நகர்கிறார்)

சி.கு: (தனக்குள்) ம்..! எனக்கு இதெல்லாம் தேவையா ! ம்...! சரி...! தேடுவோம் ...!

-----------காட்சி முடிவு -------------------


காட்சி - 5                    இடம்: தேவதாஸ் வீடு


அப்பா: தேவதாஸ் ! டேய் தேவ்...! என் கம்ப்யூட்டர் மவனே ! இங்க வாடா ! இந்த 'ஜோக்'க கேளு !

தேவ்: என்னப்பா ஆச்சு?

அப்பா: மார்க்கெட் போற வழியில...இன்னிக்கு ஒரு ஆளு...ராஜா மாதிரி க்ரீடமெல்லாம் வெச்சுகிட்டு...ஏதோ...லிஸ்ட்- காணும்-ன்னு தேடிகிட்டு இருந்தான் ! அவன் முகத்தைப் பார்க்கணுமே ! அப்படியே எம கலை ! ஹா..ஹா !

தேவ்: என்னப்பா சொல்றீங்க? லிஸ்ட்-டை தேடிகிட்டு இருந்தானா? அந்த ஆளு எங்க்ப்பா? அவனைப் பார்க்கணும் !

அப்பா: நீ ஏன்டா அவனைப் பார்க்கணும்-ங்கிற?

தேவ்: அப்பா ! அந்த லிஸ்ட் - என்கிட்டதான் இருக்கு !

அப்பா: அவன் பொண்டாட்டி போட்ட மளிகை சாமான் லிஸ்ட், உனக்கு எப்படிடா கிடைக்கும்? ஹா,,ஹா...!

தேவ்: அது மளிகை சாமான் - லிஸ்ட்-டுன்னு அவன் சொன்னானா?

அப்பா: அதானே ! இல்லையே ! நானா நெனச்சுக் கிட்டேன்  போலிருக்கு !

தேவ்: என்னோட வாங்க இப்போ ! அவனைக் காட்டுங்க...!

(வீட்டிலிருந்து வெளியேறி நடக்கிறார்கள்)

அப்பா: அவன...இங்கதான்டா பார்த்தேன் !

தேவ்: அப்பா ! நெசமாவா இல்ல ப்ரமையா?

அப்பா: இல்லடா ! கண்டிப்பா பார்த்தேன்...! இங்கதான் !

தேவ்: சரி வாங்க ! இப்படியே கொங்சம் தூரம் தேடிப் பார்ப்போம் !


----------------காட்சி முடிவு---------------------------------(தொடரும்)

Friday, June 19, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 -படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2                         இடம்: பூலோகத்தில் "கணிணி மாமா" வீடு


அப்பா: தேவதாஸ்...! ஏ..! தேவதாஸ் ! ஏன்டா...இங்கதான இருக்க...ஏன்-னு கேட்டா என்னடா?

தேவ்: அப்பா...! என்னப்பா இது பேரு...! தேவதாஸ்...பார்வதி-ன்னு...! ஊர்ல எல்லாரும் கூப்பிடற மாதிரி, நீங்களும் என்னை கம்ப்யூட்டர் மாமா-ன்னு கூப்பிடுங்க..! அப்பதான் பதில் சொல்வேன் ...

அப்பா: ஏன்டா...நீ என்ன எனக்கு மாமாவா?

தேவ்: அப்ப...கம்ப்யூட்டர் மவனே-ன்னு கூப்பிடுங்க...!

அப்பா: ஏன்டா...இன்னிக்கு ஏதோ வேலைக்கு இன்டர்வ்யூ வந்துதே...போகலியா?

தேவ்: இதெல்லாம் என்னப்பா வேலை...! என் ரேஞ்சுக்கு எடுத்த எடுப்புலியே பெரிய்ய...வேலைக்குத் தான் போவேன்...

அப்பா: ஓஹோ...இது வேறயா...!அப்ப உனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது...!

தேவ்: தேவையில்லப்பா ! எனக்கு இந்த கம்ப்யூட்டர் இருக்கு...இது எனக்கு சோறு போடும் ! இப்ப கூட பாரு...என்னென்ன பாவம் செஞ்சா என்னென்ன தண்டனை கிடைக்கும்-ன்னு சொல்ற ஒரு சாஃப்ட்வேர் பண்ணிகிட்டுயிருக்கேன்...! மவனுக்கு வேலை கிடைக்காது-ன்னு சொன்ன அப்பனுக்கு என்ன தண்டனை தெரியுமா? எண்ணெய் சட்டியில போட்டு வறுப்பாங்க...! ஹா...ஹா...!

(அப்பா முணுமுணுப்புடன் அங்கிருந்து நகர்கிறார் - பக்கத்து வீட்டுப் பையன் பாபு வருகிறான்)

பாபு: கம்ப்யூட்டர் மாமா ! எனக்கு இந்த பேப்பர்-ல பட்டம் செங்சு கொடுங்க மாமா !

தேவ்: என்னது பட்டமா...இங்க கொண்டா...(பேப்பரை வாங்கி படிக்கிறான்)
(தனக்குள்): ம்....இறப்போர் பட்டியல்...! என்னடா இது...! புதுசாயிருக்கு...! வாக்காளர் பட்டியல்தான் கேள்விப்பட்டிருக்கோம்...இது என்ன...! (படிக்கிறான்) 10-ம் தேதி - 10:16 மணிக்கு சாலை விபத்தில் இறப்பவர்கள்: சுஜாதா, கந்தசாமி, ஜோசஃப், இப்ராஹிம்,...10-ம் தேதி 10:17க்கு திருபுவனம் தங்கராசு...! என்னடா இது...! யாராவது கொலைகாரன் ப்ளான் போட்டிருக்கானா? ம்...புரியலயே ! எதுக்கும் இந்த பேப்பர் நம்மகிட்டயே இருக்கட்டும் !

(பாபுவிடம்): பாபு...! உனக்கு வேற பேப்பர்ல பட்டம் செஞ்சு தர்றேன் சரியா? ம்?

பாபு: சரி மாமா !

தேவ்: (பட்டம் செய்கிறான்)...இந்தா பட்டம்...கொஞ்சம் இரு...அதுல எம்.பி.பி.எஸ்-ன்னு எழுதித் தரேன்...சின்ன வயசிலயே டாக்டர் பட்டம் வாங்கினவன் நீதான்...! போய்ட்டு வா...!

பாபு: தாங்க்ஸ் மாமா !

-------------------------காட்சி முடிவு--------------   (தொடரும்...)

Thursday, June 18, 2015

எமலோகப் பதவி - நாடகம்

(1995-ல் வெளியான 'லக்கிமேன்' என்ற தமிழ் திரைப்படத்தை மாதிரியாகக் கொண்டு, அந்த சமயத்தில் நான் எழுதிய நாடகம்:)



காட்சி - 1                            இடம்: எமலோகம்


எமன்: சித்ரகுப்தா ! என்ன இது? பூலோகத்தில் இரண்டு நாட்களாக யாருமே இறக்கவில்லையா !

சி.கு : அது வந்து....ப்ரபு....

எமன் (கோபத்தில்): ம்...! வரவர உனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது...! ம்...நீ என்ன செய்வாய் ! உனக்கும் வயதாகி விட்டது...நீ வேலையிலிருந்து...தானாகவே ஓய்வு பெற்றுக் கொள்...!

சி,கு (அதிர்ச்சியில்) : ப்ரபு ! என்ன சொல்லிவிட்டீர்கள் ! என்னை விட வயதில் மூத்தவரான நீங்களே இன்னும் ஓய்வு பெறவில்லை ! உங்களுக்குப் பிறகுதானே நான் ஓய்வு பெறவேண்டும் !
எமன் (கோபத்தில்): ம்...! என்ன உளறுகிறாய்?

சி.கு: எமதர்மனே ! நான் இப்படி தங்களின் உதவியாளனாய் இருந்தே ஓய்வு பெற வேண்டியது தானா? தாங்கள் ஓய்வு பெற்றால், சில காலம் நானும் எமதர்மனாகப் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெறுவேனே !

எமன் (கோபத்தில்): ம்...! என்ன துணிச்சல் உனக்கு? இப்படிபட்ட விபரீத ஆசையெல்லாம் உனக்கெதற்கு ? இறப்போர் பட்டியலைக் கொண்டு வா ! அதிலே உனக்கும் ஒரு தேதி குறிக்கிறேன் ! ஹா...!

சி.கு: எமதர்மனே ! என்னை மன்னித்து விடுங்கள் !

எமன் : ம்...! ஹா...ஹா...! பிழைத்துப் போ ! ஆனால், இனியும் நீ சித்ரகுப்தனாக இருக்கத் தகுதியற்றவன். நான் வேறொருவனை அந்தப் பதவிக்குப் பார்த்துக் கொள்கிறேன். அந்த 'இறப்போர் பட்டியலை' என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ போய் சேர் ! ஹா..ஹா...

சி.கு: ப்ரபு...அந்த பட்டியல்....

எமன்: ம்...எங்கே அது?

சி.கு: ப்ரபு ! அந்த பட்டியல் தொலைந்து விட்டது...அதனால்தான் இரண்டு நாளாக....

எமன் (இடைமறித்து) : என்னது...? தொலைத்து விட்டாயா? சித்ரகுப்தா...என்ன காரியம் செய்தாய்?

சி.கு: மன்னிக்க வேண்டும் ப்ரபு ! அது என் கையிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டது...

எமன்: கீழே விழுந்து விட்டதா? அப்படியென்றால் அது பூலோகத்தில்தான் விழுந்திருக்கும்...புறப்படு பூலோகத்திற்கு...ம்...ஆகட்டும்...!

சி.கு: இதோ புறப்பட்டேன் ப்ரபு...! பல்லக்கில் பூலோகம் சென்று அந்த பட்டியலைத் தேடி மீட்டு வருகிறேன் !

எமன்: ம்ம்....வெற்றியுடன் வா !

------------காட்சி முடிவு----------------------------(தொடரும்...)

Friday, June 5, 2015

ஜோக்ஸ் - பாகம் - 3

நம்ம தலைவர், எதிர்க் கட்சி தலைவியை 'நேருக்கு நேர் விவாதத்துக்குத் தயாரா?' - ன்னு கேட்க நினைச்சு, தமிழ் புலமையைக் காட்டறேன்-ன்னு சிக்கல்-ல மாட்டிகிட்டாரு !

அப்படி என்ன சொன்னாரு?

"என் வாயோடு வாய் வைக்கத் தயாரா?"ன்னு பேசிட்டாராம்...

----------------



இன்னிக்கு மூச்சு முட்ட பிரியாணி சாப்பிட்டேன் !

'தம்' பிரியாணி-யா?

-------------------



"காகித விலை ஏறுதுன்னு, அந்த டாக்டர், புதுசா ஒரு ஆஃபர் போட்டிருக்காரு !"

"என்ன அது"

"ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி கொடுக்கணும்னா அதிக ஃபீஸ்-ஸாம். நோயாளியே, பேப்பர் எடுத்துகிட்டு வந்து எழுதிகிட்டா டிஸ்கௌன்ட்-டாம் !"

------------------------


Tuesday, June 2, 2015

தெய்வமாகலாம் !

விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பார்ப்பதற்கும்...
   இயற்கை எழில்தன்னை அகத்துள்ளே சேர்ப்பதற்கும்...
திரிந்து செல்கையிலே பாதையினை அறிவதற்கும்..
   இறைவன் நமக்களித்த சீதனமே இருவிழிகள் !

மண்ணில் கதைமுடித்து மண்ணோடு கலக்கும்முன்
   என்னே ! இன்பங்கள் கண்ணாலே அடைகின்றோம் !
கண்ணால் நாம்பெற்ற இன்பமெலாம் கண்ணற்றுக்
   கலங்கும் மற்றவர்கள் அடைந்திடவும் வேண்டாமோ?

தானம் பலவுண்டு, இருந்தாலும் நாமிங்கு...
   கண்ணுற்ற காட்சியெலாம் கண்ணற்றோர் கண்டுணர...
வானம் தனைமுட்டும் புண்ணியமும் கைகூட...
   தானம் எனஇரண்டு கண்களையும் தந்திடுவோம் !

தெய்வம் அதுதந்த விழியிரண்டை நீயிங்கே...
   தானம் எனத்தந்தால் விழிபெற்றோன் இப்புவியில்..
உய்யும் வரைஉனையே தெய்வமெனப் போற்றிடுவான் !
   ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான் !

தானம் செய்யுங்கள் ! கண்தானம் செய்யுங்கள் !
  தரணி விட்டபின்னே தெய்வம்போல் உய்யுங்கள் !
ஊனம் உள்ளோர்க்கு உளமார உதவுங்கள் !
   அவர்தம் வாழ்வினிலே வெளிச்சம் காட்டுங்கள் !

Sunday, May 31, 2015

சுமை தாங்கும் மொட்டுக்கள் !

படித்துக் களிக்கின்ற வயதில் - மகனைப்
   பள்ளி அனுப்பாம லேயே ...
கடிந்தே என்னென்ன வேலை - இங்கே
   செய்ய்ச் சொல்கின்றார் பெற்றோர் !

காலை மாலையென இன்றி - தன்
   காலில் ஏதுமணியா சிறுவர்
சாலை ஓரங்களில் கிடந்து - பிறர்
   செருப்பைத் துடைக்கின்றார் பாரீர் !

சிறிய வயிறுதனைப் பேண - இந்த‌
  சிறுவர் படுந்துன்பம் பெரிது !
பெரிய உணவகங்கள் தன்னில் - எச்சில்
   தட்டுகள் அகற்றிடுவார் பாரீர் !

ஓடித் திரிகின்ற பருவம் ! - அதிலே
   ஓய்வே இல்லாமல் தினமும்...
பீடித், தீப்பெட்டித் தொழிலில் - பல‌
   பாடு படுகின்றார் பாரீர் !

எட்டு வயதாக வில்லை ! - உலகம்
   ஏதும் அறியாத பிள்ளை !
மொட்டு மலராத முல்லை - மேலே
   பெரிதாய் சுமத்தலாமோ கல்லை?

நெஞ்சு துடிக்கின்ற தய்யா ! - இவர்
   நிலைமை நினைக்கின்ற போதே !
பிஞ்சு உடம்பெல்லாம் இனியும் - இப்
   பாடு படும்நிலையை ஒழிப்போம் !

பெருமை சேர்த்திடும்நல் கல்வி ! - அதைப்
   பெரிதாய் அவர்கட்குத் தருவோம் !
அருமை செல்வங்கள் சிறுவர் - இதை
   அகத்தோடு நிறுத்தி செயல்படுவோம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates