ராகம்: பூர்விகல்யாணி
பூதலத்து நாயகனே நான்கு
வேதப் பொருள் ஆனவனே _ உன்
அட்டக கீதம் இசைக்கின்றேன் _ இனிய
நாதமாய் வருவாய் நீயே
1)
ராகம்: கல்யாணி
நிறைவாழ்வு தந்தருளும்
நில வேந்தன் கணபதியே
மறைபொருளாய் ஆகி நிற்கும்
பரிபூர்ண நாயகனே
குறைககூறும் குரல்கேட்டு
கற்பகமாய்த் தருபவனே
சிறைபட்டேன் உன்னழகில்
சிதம்பரத்தான் திருமகனே
2)
ராகம்: ஹம்சத்வனி
திருமகனே திருக்குமரன்
திருமணத்தை முடித்தவனே
வருபவனே வரமருள
விறைந்திட்டே வாகனமேல்
திருமுருகன் மூத்தவனே
திருத்துருத்தி ஆண்டவனே
பேருவகை அடைந்திட்டேன்
பெற்றதெல்லாம் உன்னருளே
3)
ராகம்: ரஞ்சனி
அருள் பொழியும் மேகம் நீ
அழகு பரி பூரணனே
பொருள் பெருக்கும் காரணனே
போற்றுகிறேன் காத்திடுவாய்
இருள் நீக்கி ஒளிதந்து
இடர்விலக்கும் திருவிளக்கே
பேருள்ளம் கொண்டவனே
பார்காக்கும் வல்லவனே
4)
ராகம்: கானட
வல்லவனே உன்நாம
வண்மைதன்னை உணர்ந்திட்ட
நல்லவர்க்கே அருள்புரிவாய்
நன்மைகளைச் செய்திடுவாய்
அல்லல்களை அழித்திடுவாய்
அகமுவந்து பாடுகிறோம்
வள்ளலேஉன் திருவடிகள்
நம்பினார்க்குத் துணையாகும்
5)
ராகம்: ஆரபி
துணையாகும் நின் நினைவு
தெளிந்திட்டால் அச்சமில்லை
இணையில்லை வேரொருவர்
இங்குனக்கு முன்நிற்க
வினைத்தீர்க்கும் நாயகனே
வேழமுக வந்திடுவாய்
உனைக் கண்டேன் எனைமறந்தேன்
உண்மைபரி பூரணனே
6)
ராகம்: மோகனம்
பரிபூர்ண நாயகனே
பண்பு நலன் தருபவனே
கரிமுகத்து பாலகனே
கடைக் கண்ணால் தருபவனே
ஹரிஹரனின் மூத்தவனே
அவனிக்கே முதலவனே
நெறிதவறா உன்னருளே
நிகழ்த்திடுமே அற்புதங்கள்
7)
ராகம்: மலையமாருதம்
அற்புதங்கள் ஆற்றிடுமே
அருள்புரியும் உன்கரங்கள்
பொற்பாதம் பிடித்திட்டேன்
பரிபூர்ண நாயகனே
நற்கதியை தந்திடுவாய்
நலமருள வந்திடுவாய்
ஏற்றமுறச் செய்திடுவாய்
எங்கள் மணிபாலகனே
8)
ராகம்: மத்யமாவதி
பாலகனே கணபதியே
பார் போற்றும் பண்டிதனே
நீலகண்டன் மைந்தனே நீ
நிற்கின்றாய் எம்நெஞ்சில்
வேலவனின் சோதரனே
வேண்டுவரம் தந்திடுவாய்
ஆலமரத் தெய்வமேநீ
அடியார்க்கு அமிழ்தம்தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment